அமெரிக்கா பிடிவாரண்ட்- இந்திய மின்சார வாரிய அதிகாரிகளுக்கு அதானி லஞ்சம் கொடுத்தது ஏன்? 10 பாயிண்ட்ஸ்


அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானிக்கு எதிராக அமெரிக்கா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பது பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. அமெரிக்கா நீதிமன்றம் அதானிக்கு ஏன் பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும்? அதானி குழுமம் இந்திய மாநில மின்சார வாரிய அதிகாரிகளுக்கு ஏன் லஞ்சம் தர வேண்டும்? மத்திய அரசின் SECI நிறுவனத்துக்கு என்னதான் தொடர்பு? என்பதை சுருக்கமாகப் பார்க்கலாம்.

1) மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் SECI – Solar Energy Corporation of India. இது மத்திய அரசின் நவரத்தின நிறுவனங்களில் ஒன்றாகும். சூரிய ஒளி மின்சாரத் திட்டங்களை செயல்படுத்தக் கூடியது. மாநில அரசுகளுக்கு சூரிய ஒளி மின்சாரத்தை பெற்றுத் தரக் கூடிய நிறுவனம்.

2) மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான SECI எனப்படுகிற Solar Energy Corporation of India நிறுவனத்துடன் கவுதம் அதானியின் அதானி குழுமம் சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கான ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது.

3) தமிழ்நாடு, ஆந்திரா, சத்தீஸ்கர் மாநில அரசுகளின் மின்சார வாரியங்கள் SECI – Solar Energy Corporation of India நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளன.

4) SECI – Solar Energy Corporation of India தமிழ்நாடு, ஆந்திரா, சத்தீஸ்கர் மாநில அரசுகள் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகவேர் அந்த மாநில அரசின் மின்சார வாரிய அதிகாரிகளுக்கு அதானியின் அதானி குழுமம், அமெரிக்காவில் பட்டியலிடப்பட்ட எரிசக்தி நிறுவனமான Azure Power லஞ்சம் கொடுத்தன என்பது குற்றச்சாட்டு.

5) இப்படி மாநில அரசின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து ஒப்பந்தங்களைப் போட வைத்து மத்திய அரசின் Solar Energy Corporation of India நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளிதிட்டங்களைப் பெற்றது அதானி குழுமம்.

6) மாநிலங்களில் ஆளும் அரசுகள் தனியாகவும் அதானி குழுமம் உள்ளிட்டவைகளுடன் சூரிய ஒளி மின்சார கொள்முதல் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளவும் முடியும்.

7) இந்தியாவில் மாநில அரசின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இதன் மூலமாக இந்திய மத்திய அரசின் SECI – Solar Energy Corporation of India நிறுவனத்திடம் ஒப்பந்தங்களைப் பெற்றதை அமெரிக்காவின் முதலீட்டாளர்களிடம் மறைத்தது அதானி குழுமம். இப்படி லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்களிடம் ரூ20,000 கோடி முதலீடுகளைப் பெற்றது அதானி குழுமம் என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டு

8) தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளின் அதிகாரிகளுக்கு மொத்தம் ரூ2,029 கோடி ( 265 மில்லியன் டாலர்) லஞ்சம் தருவதற்கு அதானி குழுமம் ஒப்புக் கொண்டது என்பதும் அமெரிக்காவின் குற்றச்சாட்டு.

9) இந்தக் குற்றச்சாட்டில்தான் அதானி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

10) கவுதம் அதானி, சாகர் அதானி (அதானி கிரீன் எனர்ஜி), ரஞ்சித் குப்தா, ரூபேஷ் அகர்வால் (Azure Power) உள்ளிட்டோர் மீது அமெரிக்கா நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Share on: