அரசு மருத்துவமனையில் ஃபுல் போதையில் இருந்த டாக்டர்.. திருவள்ளூரில் நோயாளிகள் அதிர்ச்சி!


திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் மது போதையில் ரகளை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறித்து விசாரணை மேற்கொள்ள மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி 2 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்துள்ளார்.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினந்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிசிக்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர் நல்லதம்பி என்பவருக்கு நேற்று இரவு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் பணிக்கு வந்த மருத்துவர் நல்லதம்பி அதிக மதுபோதையில் இருந்துள்ளார். அவர் நோயாளிகளுடன் உடன் இருந்த உறவினர்களை ஒருமையில் பேசி திட்டி உள்ளார்.

நோயாளி ஒருவர் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது பணியில் இருந்த பொது மருத்துவர் நல்லதம்பி என்பவர் அந்த நோயாளியிடம் இசிஜி எடுத்து வரச் சொல்லி அனுப்பி வைத்துள்ளார். பின்னர் மற்றொரு நோயாளியின் இசிஜியை பார்த்து அவருக்கு மருத்துவம் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் நோயாளியின் உறவினர்கள் மருத்துவரை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் சமாதானம் செய்து மருத்துவரை அழைத்துச் சென்றுள்ளனர். அதைத்தொடர்ந்து, அந்த மருத்துவர் மதுபோதை மயக்கத்தில் மருத்துவமனைக்கு வெளியே படுத்து தூங்கியதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட மருத்துவமனை ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு உள்ளே செல்லுமாறு தெரிவித்ததற்கு, அவர் போக மறுத்துள்ளார்.

அரசு மருத்துவர் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த போது மது போதையில் தூங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவராக இருந்துகொண்டு உயிர்களின் மீது அலட்சியாக இருந்த இந்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் குறிப்பிட்ட அந்த மருத்துவர், மதுபோதையில் தான் பணிக்கு வந்து தவறாக மருத்துவம் பார்த்தாரா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி 2 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்துள்ளார்.
Share on: