ஆகாஷ் பாஸ்கரன் தலைக்கு மேல் கத்தி.. டாஸ்மாக் விசாரணைக்கே தடை! தம்பிகளுக்கு இல்லை! தீர்ப்பை பாருங்க


டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருக்கிறது. இந்த நிலையில் வழக்கை தொடுத்த டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது புதிய சோதனையோ அல்லது நடவடிக்கையோ எடுக்கக் கூடாது என்று மட்டும் தான் உச்ச நீதிமன்றம் தடையாணையில் கூறியுள்ளதாக கூறி இருக்கிறார் அதிமுக வழக்கறிஞர் இன்பத்துரை.

தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கீழ் இயங்கும் டாஸ்மாக் தமிழகத்தில் தற்போது சில்லறை மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இங்கு பல்வேறு தனியார் மது உற்பத்தி நிறுவனங்களின் மது வகைகள் விற்கப்படுகிறது.

இந்த நிலையில், நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மேலும் கணக்கில் காட்டாமல் தனியார் மது உற்பத்தி நிறுவன உரிமையாளருடன் சேர்ந்து முறைகேடு நடப்பதாக புகார் கூறப்பட்டது.

இதனையடுத்து அந்த தகவலின் அடிப்படையில் சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 6ஆம் தேதி முதல் சோதனை நடத்தினர். ஒரு சில இடங்களில் சோதனை முடிவடைந்த நிலையில், சென்னை, புதுக்கோட்டை, கோவை ஆகிய பகுதிகளில் சோதனை 8ஆம் தேதி வரை நீடித்தது. இந்த சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி, டாஸ்மாக் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த நிலையில், இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

முன்னதாக, டாஸ்மாக் மேலான இயக்குனர் விசாகன் ஐஏஎஸ்-ஐ அழைத்துச் சென்று 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அவரது மனைவியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் ரத்தீஷ் என்பவருக்கு சொந்தமான இடங்களிலும், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இந்நிலையில் ரத்தீஷுக்கும் விசாகன் ஐஏஎஸ்-க்கும் இடையே நடந்த உரையாடல் தொடர்பான ஆவணங்களும் அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.

மேலும் டாஸ்மாக் மூலம் வந்த முறைகேடான பணத்தை ஆகாஷ் பாஸ்கரன் திரைத்துறையில் முறையீடு செய்வதாகவும் சொல்லப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த விசாரணையும் தடைபட்டது போல பிம்பம் உருவாக்கப்படுவதாகவும், ஆனால் உண்மை அப்படி அல்ல என விவரித்து இருக்கிறார் அதிமுக வழக்கறிஞரான இன்பதுரை.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை பதிவிட்டு இருக்கும் அவர்,” அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு உச்சநீதிமன்றம் விதித்த இடைக்கால தடை தொடர்பான ஆணை அப்லோடு செய்யப்பட்டு இருக்கிறது. வழக்கை தாக்கல் செய்த டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை புதிய சோதனையோ அல்லது நடவடிக்கையோ எடுக்கக் கூடாது என்று மட்டும் தான் உச்ச நீதிமன்ற தடை ஆணை உள்ளது. தம்பிகள் டாஸ்மாக் ஊழியர்கள் அல்லவே? என குறிப்பிட்டு இருக்கிறார்.

அதாவது அமலாக்கத்துறை டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் ஊழியர்களை துன்புறுத்தியதாகவும் அந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தான் டாஸ்மாக் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தான் அமலாக்கத்துறை அடுத்த கட்டமாக டாஸ்மாக் அதிகாரிகள் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட்டிருக்கிறது. இதன் காரணமாக ரத்தீஷ் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோரின் மீதான விசாரணைக்கு தடை இல்லை என கூறி இருக்கிறார்.

ஏற்கனவே ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோர் தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படும் நிலையில் அமலாக்கத்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை என்கிறார். மேலும் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்த சினிமா படங்களின் நாயகர்கள், நடிகர், நடிகைகளையும் விசாரிக்கலாம் என்பது இந்த தீர்ப்பின் மூலம் தெரிய வந்திருக்கிறது.
Share on: