இதற்கு மேல் முடியாது குருநாதா.. அடையாறு டூ நாவலூர்.. சென்னை ஓஎம்ஆர் சாலை குறித்து குமுறும் மக்கள்
தமிழ்நாட்டிலேயே பணக்கார பகுதி என்றால் அது சென்னை ஓஎம்ஆர் சாலை பகுதி தான். பழைய மகாபலிபுரம் சாலை பகுதி தான் தமிழ்நாட்டிலேயே மிக அதிகமான ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியாகும். பல லட்சம் பேர் வேலை செய்யும் 25 கிமீ நீளமுள்ள ஐடி காரிடர் பகுதியான ஓஎம்ஆர் பகுதியில் மோசமான சாலை, கழிவுநீர் இணைப்பு இல்லை, குடிநீர் இணைப்பு இல்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
சென்னையில் தொழில் நுட்ப நிறுவனங்கள் அதிகமுள்ள பகுதி என்றால், பழைய மகாபலிபுரம் சாலை பகுதி தான். சென்னை அடையாறு தொடங்கி திருவான்மியூர், பெருங்குடி, கந்தன்சாவடி, தரமணி, துரைப்பாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர், சிறுசேரி, நாவலூர், தாழம்பூர், கேளம்பாக்கம், படூர் என சென்னை ஓஎம்ஆர் சாலை அப்படியே திருப்போரூர் தாண்டி மகாபலிபுரம் வரை செல்கிறது. இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் எப்போதுமே காணப்படும்.
இதில் அடையாறு தொடங்கி கேளம்பாக்கம் வரை 25 கிலோ மீட்டர் தூரமுள்ள ஐடி கேரிடர் சாலை பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் இணைப்பு சாலைகள் முறையாக இல்லை என்றும்,. சரியான கழிவு நீர் இணைப்புகள் இல்லை எனறும், தண்ணீர் இணைப்புகள் இல்லை என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.
பிரதான சாலையான ஓஎம்ஆர் சாலையில் பல்வேறு ஐடி நிறுவனங்கள் உள்ள நிலையில், அங்கு மெட்ரோ பணிகள் நடந்து வருகிறது. இந்த மெட்ரோ பணிகள் காரணமாக அங்கு சாலைகள் மோசமான நிலையில் உள்ளதாக குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டுகிறார்கள். சுங்கச்சாவடிகள் அமைத்து சுங்க கட்டணம் வசூலித்த காலம் வரை சரியாக பராமரிக்கப்பட்ட சாலைகள்,. இப்போது சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்ட பிறகு அங்கு சர்வீஸ் சாலைகள் சீரற்ற வகையில் மாறிவிட்டதாகவும், சாலைகள் மோசமான நிலையில் பாரமரிப்பு இன்றி உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சென்னை மெட்ரோ பணிகள், சென்னை குடிநீர் வடிகால் வாரிய பணிகள் மற்றும் எரிவாயு திட்ட பணிகள் காரணமாக வடிகால் கால்வாய்கள் அடைக்கப்பட்டிருப்பதாகவும், புதிதாக தோண்டப்பட்ட கால்வாக்ள், சாலை பயணத்தை மிகவும் கடுமையாக்கி உள்ளதாகவும் ஓஎம்ஆர்வாசிகள் சொல்கிறார்கள். சென்னை மெட்ரோ, நெடுஞ்சாலைகள் துறை மற்றும் சென்னை மாநகராட்சி ஆகிய துறைகளில் நடந்த பொறுப்பு மாற்றங்களால் ஓஎம்ஆர் சாலை புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் ஓஎம்ஆர் குடியிருப்புவாசிகள் குமுறுகிறார்கள்.
இதுபற்றி நெட்டிசன் ஒருவர் கூறுகையில், ஓஎம்ஆரை ஒட்டியுள்ள பகுதிகளில் இணைப்பு சாலைகள் மிக மோசமானதாக இருக்கிறது. குடிநீர் இணைப்பு இல்லை , கழிவுநீர் இணைப்பு இல்லை , ஆனால் ஓஎம்ஆர் குடியிருப்பு வாசிகள் மற்றும் அங்கு சொத்து வைத்துவர்கள் மட்டுமே சமமாக வரி செலுத்த வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மக்களைப் பற்றி எந்த அரசியல் கட்சியும் கவலைப்படவில்லை என்றும் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், இது தான் ஓஎம்ஆர் சாலையின் அவல நிலை. சென்னையின் முக்கியமான வழித்தடங்களில் ஒன்று தான் ஓஎம்ஆர். பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைக் கொண்டுள்ள இந்த பகுதியின் நிலையைப் பாருங்கள். தமிழகத்தில் நகர்ப்புற நிர்வாகம் நாளுக்கு நாள் சீரழிந்து வருகிறது.. இதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இதேபோல் மூன்றாவதாக நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில், ஒவ்வொரு நாளும் நான் இந்த ஓஎம்ஆர் சாலையில் வண்டி ஓட்டுகிறேன். இது மோசமான சாலை, பள்ளங்கள் அதிகமாக உள்ளது. சர்வீஸ் சாலைகளும் மோசமான உள்ளது. இந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. இதன் காரணமாக தினசரி சில சிறிய விபத்துக்கள் நடக்கின்றன. ஓஎம்ஆர் சாலை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. இரு சக்கர வாகனங்களுக்கு இது மிகவும் ஆபத்தான சாலையாக உள்ளது. தயவுசெய்து நடவடிக்கை எடுங்கள் என்று கூறியுள்ளார்.
அடுத்தாக நெட்டிசன் வெளியிட்ட பதிவில், ஓஎம்ஆர் சாலை என்பது சென்னையின் தகவல் தொழில்நுட்பக் கூட்டத்தின் உயிர்நாடியாக இருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட நிலையில் அந்த பகுதியை பார்ப்பதற்கு மிகவும் மனவருத்தமாக இருக்கிறது. சென்னை நகரத்தின் தேவைகளுக்கு ஏற்ப நகர்ப்புற நிர்வாகத்தில், இப்போது ஒரு தீவிரமான மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. நகரம் எதிர்காலத்தில் வேகமாக வளரும் போது , உள்கட்டமைப்பும் வளர வேண்டும். ஆனால் அப்படியே பழைய காலம் போலவே சிக்கி இருப்பது போல் உள்ளது. நமது தலைவர்கள் கவனத்தில் கொண்டு விரைந்து செயல்படுவார்கள் என்று நம்புவோம். ஒரு வேளை, அந்தப் பகுதியைச் சுத்தப்படுத்தவும் பராமரிக்கவும் ஒரு சமூகம் சார்ந்த முயற்சியைத் தொடங்கலாமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.