உண்ணாவிரத போராட்டங்களுக்கு அனுமதி வழங்க சட்டத்தில் இடமில்லை.. சென்னை ஐகோர்ட் கருத்து!
உண்ணாவிரத போராட்டங்களுக்கு அனுமதி வழங்க சட்டத்தில் அனுமதியில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சாம்சங் ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், சிஐடியு தொழிற்சங்க இணைப்பு பெற்ற சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில், தொழிற்சங்கத்தை துவங்கி, அதை பதிவு செய்யக் கோரி விண்ணப்பித்தனர். சங்கத்தை பதிவு செய்யாததால் வழக்கு தொடர்ந்தனர்.
இதற்கிடையே, சங்கத்தை பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 91 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதியளிக்க உத்தரவிடக் கோரி, காஞ்சிபுரம் மாவட்ட சிஐடியு செயலாளர் முத்துக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்க சட்டத்தில் அனுமதி இல்லை என நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து, முழக்கம் எழுப்பி போரட்டத்தில் ஈடுபட அனுமதி அளிக்குமாறு மனுதாரர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. பின்னர், இந்த மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணயை வரும் நவம்பர் 21 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.