
தமிழ்நாட்டில் அதிக தொண்டர்களைக் கொண்ட கட்சி அதிமுக என்று அக்கட்சியினரால் கூறப்படும் நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பல அணிகளாக அக்கட்சி பிரிந்து நிற்கிறது.
பெரும்பாலான பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருந்ததால் அவர் தனக்கு போட்டியாக வர வாய்ப்புள்ள சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை கட்சியிலிரிருந்து நீக்கினார். இவர்களுக்கு ஆதரவாக நின்றவர்களையும் கட்சியிலிருந்து வெளியேற்றினார். இந்த மூவரின் ஆதரவாளராக காட்டிக்கொள்ளாத அதே சமயம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தனது கருத்துக்களை சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைத்து வருபவர் கே.சி.பழனிசாமி.
அதிமுக பல அணிகளாக பிரிந்ததிலிருந்து தொடர்ந்து அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்து வருகிறது. டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரும் தோல்வியையே சந்திக்கின்றனர். இதனால் பிரிந்து நிற்கும் அணிகள் எல்லாம் இணைய வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டது.
கே.சி.பழனிசாமி, ஜேசிடி பிரபாகர், புகழேந்தி உள்ளிட்டவர்கள் இடம்பெற்றிருந்த அக்குழு சசிகலா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடும் என்று கூறப்பட்டது. ஆனால் இதை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார். எனவே ஒருங்கிணைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி தன்னைப் பற்றி தரக்குறைவாக பேசியதாக கே.சி.பழனிசாமி கோவை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், “நான் கடந்த 1972ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தேன். 1982ஆம் ஆண்டில் அதிமுக இளைஞர் அணி மாவட்ட துணைச்செயலாளராக நியமிக்கப்பட்டேன். 1984ஆம் ஆண்டு காங்கேயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்வானேன். 1989ஆம் ஆண்டு ஜெயலலிதா இருந்தபோது திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைக்க ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. கோவை விமான நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தபோது, அவரிடம் அதிமுக ஒருங்கிணைப்பு குழு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ரோட்டில் போகிற வருகிறவர்கள் குழு அமைத்தால் அதை கேள்வியாக கேட்கிறீங்க, அவர் கட்சியில் கிடையாது. ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோது போய் சேர்ந்தார். அவரெல்லாம் ஒரு பெரிய ஆளுன்னு நினைத்து நீங்க கேக்குறீங்க என்று கூறியுள்ளார். எனவே அவர் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” தெரிவிக்கப்பட்டுள்ளது.