ஒண்டிப்புத்தூரில் பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்த வாகன ஓட்டிகள்!
கோவை மாவட்டம் ஒண்டிப்புத்தூரில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்ததில் இருவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அக்டோபர் மாதம் அல்லது நவம்பர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும். இந்த நிலையில் சாலைகளில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்காக ஆங்காங்கே பாதாள சாக்கடைகள் தோண்டப்பட்டு , மழை நீர், நீர் நிலைகளுக்கு செல்ல வழிவகை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் ஒண்டிப்புத்தூர் பகுதியில் முக்கிய சாலையில் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அங்கு இன்னமும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் அந்த பாதாள சாக்கடையையொட்டி இரும்பு தடுப்புகள் போடப்பட்டிருக்கின்றன.
அந்த சாலை பிஸியான சாலை என்பதாலும் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும் என்பதாலும் நெருக்கடியாகவே காணப்படும். அந்த வகையில் இன்று பிற்பகல் அவ்வழியாக ஒரு இரு சக்கர வாகனத்தில் இருவர் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பாதாள சாக்கைடை அருகே அவர்கள் சென்ற போது அங்கிருந்த தடுப்பில் அவர்களது வாகனம் லேசாக மோதியது. இதில் இருவரும் நிலைத்தடுமாறி அந்த பள்ளத்தினுள் விழுந்தனர். பைக் சாலையிலேயே விழுந்துவிட்டது.
இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் போக்குவரத்து போலீஸாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து பள்ளத்தில் விழுந்த இருவரையும் மீட்ட போலீஸார், அவர்கள் லேசான காயமடைந்ததால் மருத்துவமனையில் சேர்த்தனர்.
போக்குவரத்தில் பிஸியாக இயங்கும் அந்த சாலையில் இரும்பு தடுப்புகளை பாதுகாப்பாக வைக்காமல் ஏனோ தானோ என வைத்தது பெரும் தவறாகும். அது போல் இது போன்ற பணிகள் நடக்கும் போது அங்கு எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு கூறியிருப்பதாவது: விபத்து நடந்த ஒண்டிப்புத்தூர் சாலையில் இருக்கும் பாதாள சாக்கடைக்கான பள்ளத்தை ஆய்வு செய்வோம் என தெரிவித்திருந்தார். மழைக்காலத்திற்குள் இது போன்ற அபாயகரமான பள்ளங்களை மூடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.