
வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஹேமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில், பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் வயிற்றில் இருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்று உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கர்ப்பிணி இளம்பெண் ஒருவர் திருப்பூரில் பணியாற்றி வருகிறார். இவர் மருத்துவ பரிசோதனைக்காக சொந்த ஊர் புறப்பட்டுள்ளார். கோவை – திருப்பதி பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணத்தை தொடங்கிய அவர், மகளிர் பெட்டியில் இருந்திருக்கிறார். ஜோலார்பேட்டை அருகே ரயில் சென்ற போது, திடீரென இளைஞர் ஒருவர் ரயிலில் ஏறி இருக்கிறார்.
அந்த நேரத்தில் மகளிர் பெட்டியில் இருந்த அனைவரும் அந்த ரயில் நிறுத்தத்தில் இறங்கிவிட்ட நிலையில், கர்ப்பிணி பெண் மட்டுமே தனியே இருந்திருக்கிறார். இதனையடுத்து ரயிலில் ஏறிய இளைஞர், கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த கர்ப்பிணி பெண் உடனடியாக செயினை இழுத்து ரயிலை நிறுத்த முயற்சித்துள்ளார்.
ஆனால் கர்ப்பிணி பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து அந்த இளைஞர் கதவிற்கு அருகே சென்றுள்ளார். அப்போது கீழே விழுந்துவிடக் கூடாது என்று கர்ப்பிணி கவனம் கொள்ள, அவரின் கைகளை உடைத்து இளைஞர் கீழே தள்ளிவிட்டுள்ளார். இதன்பின் அருகில் இருந்தவர்களால் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கர்ப்பிணி பெண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இதன்பின் கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கேவி குப்பம் அருகே உள்ள பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் அளிக்கப்பட்ட பேட்டி ஒளிபரப்பாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே பல்வேறு குற்றச் செயல்களில் ஹேமராஜ் ஈடுபட்டிருந்ததும் தெரிய வந்தது. இதனிடையே கைதான ஹேமராஜ் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதேபோல் ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.
தேசிய மகளிர் ஆணையம் தரப்பில் தமிழக டிஜிபி-யிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இந்த நிலையில் கோவை – திருப்பதி ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் நலமாக இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. காயமடைந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பாக ரூ.50 ஆயிரம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது. இதன்பின் ரயில்வே அதிகாரிகள் கர்ப்பிணி பெண்ணை சந்தித்து நிவாரண உதவியை வழங்கினர்.
இந்த நிலையில் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்று உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்பின், அறுவை சிகிச்சை மூலமாக இறந்த சிசுவை அகற்ற மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.