கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடத்தில் இன்று காலை முதல் நீர் திறப்பு!


கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் மற்றும் கொள்ளிடத்தில் இன்று காலை முதல் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 9,105 கன அடி, வெண்ணாற்றில் வினாடிக்கு 9,017 கன அடி, கல்லணை கால்வாயில் வினாடிக்கு 2,513 கன அடி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 6,548 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பாசனத்துக்காக ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர் திறந்துவிடப்படும். ஆனால் இந்த ஆண்டு தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட மறுத்தது. இதனால் மேட்டூர் அணையும் வறண்டே காணப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் முழுவதும் கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை இடைவிடாமல் கொட்டியது. இதனால் காவிரி ஆறு, அதன் துணை ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த பெருவெள்ளத்தால் கர்நாடகா அணைகள் நிரம்பி வழிய, உபரி நீர் தமிழ்நாட்டுக்கு திறந்துவிடப்பட்டது.

இதனையடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென அதிகரித்தது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த 28-ந் தேதி திறந்துவிடப்பட்டது. இதனால் காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

மேட்டூர் அணையில் இருந்து சீறிப் பாய்ந்த காவிரி ஆறு, முக்கொம்பை வந்தடைந்து காவிரி, கொள்ளிடமாக பிரிந்து பின்னர் கல்லணைக்கு சென்றது. கல்லணையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் காவிரி டெல்டா பாசனத்துக்காக நீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை முதல் கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 9,105 கன அடி, வெண்ணாற்றில் வினாடிக்கு 9,017 கன அடி, கல்லணை கால்வாயில் வினாடிக்கு 2,513 கன அடி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 6,548 கன அடி நீர் காவிரி டெல்டா பாசனத்துக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. கல்லணை வாய்க்கால் என்பது பட்டுக்கோட்டை, பேராவூரணிக்கு காவிரி நீரை கொண்டு சேர்க்கும். வெண்ணாறு ஆற்றில் திறக்கப்படும் நீர் தஞ்சாவூர் பகுதிகளை சென்றடையும். காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீர் கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக பூம்புகார் சென்றடையும். இதனால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Share on: