கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் பலி.. உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என அச்சம்!


கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 3 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கள்ளக்குறிச்சி நகர்ப்பகுதியைச் சேர்ந்த கருணாபுரம் பகுதியில் கண்ணுக்குட்டி என்ற பட்டப்பெயர் கொண்ட நபர் ஒருவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். பல முறை சிறை சென்றுள்ள இவர் மீண்டும் மீண்டும் கள்ளச்சாராய விற்பனையை தொடர்ந்து வந்துள்ளார்.

அரசு மதுபானக் கடையான டாஸ்மாக்கில் மதுபானங்கள் விலை அதிகம் என்பதால், கருணாபுரம் பகுதியை ஒட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் கள்ளச்சாராயத்தை நாடி வந்துள்ளனர்.

இந்நிலையில், அப்பகுதியில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில் 50க்கும் அதிகமானவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் கள்ளச்சாராயம் குடித்த சுரேஷ், பிரவீன், சேகர், மகேஷ், ஜெகதீஷ் ஆகிய 5 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே தான் 14 பேர் உயர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இத்தகைய சூழலில் தான் ஜிப்மர் மருத்துவுமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் பலியாகி உள்ளனர். மணி, கிருஷ்ணமூர்த்தி, இந்திரா ஆகியோர் சிகிச்சை பலனின்றி இன்று மாலையில் பலியாகி உள்ளனர். மற்ற 11 பேருக்கும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி அருகே நிகழ்ந்துள்ள கள்ளச்சாராய சாவு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாராயம் குடித்தவர்கள் உயிரிழந்தது எப்படி என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சாராயம் விற்பனை செய்தவரை தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Share on: