கள் விற்பனை.. தடையை நீக்குவது பற்றி ஏன் பரிசீலிக்க கூடாது.. தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி


தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது என்றும், வரும் 29 ஆம் தேதி இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடை, சூப்பர் மார்க்கெட்டுகளில் மது விற்பனைக்கு அனுமதி கோரியும், கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரியும் ஐடி ஊழியர் முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.

தமிழகத்தில் மதுபானக் கடைகளை முற்றிலும் மூடி பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. எனினும், பூரண மதுவிலக்கு என்பது தற்போதைக்கு சாத்தியம் இல்லை எனவும் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவதுதான் அரசின் நோக்கம் எனவும் எனவும் ஆளும் கட்சி தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான், ரேஷன் கடைகளில் மதுவிற்பனையை அனுமதிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐடி ஊழியர் முரளிதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலில், 2020 – 21 ம் ஆண்டு 39 ஆயிரத்து 760 கோடி ரூபாயும், 2021- 22 ம் ஆண்டில் 42 ஆயிரத்து 421 கோடி ரூபாயும் விற்றுமுதல் பெற்றதாக கூறிய டாஸ்மாக் நிர்வாகம், இந்த ஆண்டுகளில் 161 கோடி ரூபாயும், 69 கோடி ரூபாயும் இழப்பை சந்தித்ததாகக் கூறியுள்ளது எனவும், இதன்மூலம் லாபம், வேறு திருப்பி விடப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

டாஸ்மாக்குக்கு மதுபானம் சப்ளை செய்யும் நிறுவனங்கள், பெரும்பாலும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமானதாக உள்ளதாகவும், இதனால் டாஸ்மாக் நிர்வாகம் குறிப்பிட்ட சில பிராண்ட் மதுபானங்களை மட்டும் விற்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக்கில் ஊழல் நிலவுவதாகவும், சென்னை விமான நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வருவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும், தமிழகத்தில் விற்கப்படும் மதுபானங்களின் தரத்தை விட, வெளிமாநிலங்களில் மதுபானங்களின் தரம் அதிகமாக இருப்பதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களுக்கு 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அதிகம் விற்பனை செய்வதாகவும், இதன்மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாயை டாஸ்மாக் கடை விற்பனையாளர், மேலாளர், துறை அமைச்சர் பகிர்ந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மதுபான பாட்டில்களில் அச்சிடப்பட்டிருக்கும் விற்பனை விலையை விட கூடுதல் விலை கொடுக்க வேண்டாம் என எல்லா டாஸ்மாக் கடைகளிலும் அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிட வேண்டும் எனவும், கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க, சில கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், மதுபானங்களை நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களிடம் இருந்து வாங்கி, சூப்பர் மார்க்கெட்கள், ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கள் விற்பனைக்கு தடை விதித்து 1986 ல் மதுவிலக்கு சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தையும், டாஸ்மாக் மூலம் மது விற்பனை செய்வதற்கு அனுமதிதது 2003 ல் கொண்டு வரப்பட்ட திருத்தத்தையும் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வு, மதுபானங்களை சூப்பர் மார்க்கெட்கள், ரேஷன் கடைகளில் விற்பது என்பது அரசின் கொள்கை முடிவு என தெரிவித்தது.

அதேசமயம், டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கமளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது அரசின் கொள்கை முடிவு எனவும், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்க முடியாத ஏழை மக்களுக்காக, கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்து அரசு ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது என விளக்கமளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Share on: