காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் தமிழகத்தில் அதிக பாதிப்பு! எச்சரிக்கும் ஆய்வாளர்கள்


உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் குறித்து விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், தமிழ்நாடு இந்த பிரச்னையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் 67 தீவிர வானிலை நிகழ்வுகள் தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு காலநிலை மாற்ற நிகழ்வுகள் அதிகமாக பதிவாகியுள்ளதாக, காலநிலை இந்தியா 2024 அறிக்கை தெரிவித்திருக்கிறது. அதன்படி, கடந்த 2023ம் ஆண்டு வெறும் 27 நாட்கள்தான் தமிழ்நாட்டில் தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த ஆண்டு வெப்பநிலை அதிகரிப்பு, கனமழை மற்றும் சூறாவளி போன்றவை அதிகரித்துள்ளன. இதனால் 25 மனித இறப்புகள், 14 கால்நடைகள் இறப்பு மற்றும் 149 வீடுகள் சேதமடைந்துள்ளன. மட்டுமல்லாது தமிழகத்தில் 1,039 ஹெக்டேர் அளவில் நெல், கரும்பு மற்றும் நிலக்கடலை பயிர்கள் சேதம் ஏற்பட்டுள்ளன.

கேரளாவிலும், கர்நாடகாவிலும் கூட இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில்தான் தீவிர வானிலை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. தேசிய அளவில் பார்த்தால், 2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 274 நாட்களில் 255 நாட்களில் இந்தியா தீவிர வானிலையை அனுபவித்துள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவான தீவிர காலநிலை பாதிப்புகளை விட இது அதிகமாகும்.

காலநிலை மாற்றம் என்றால் என்ன?: உலகம் வெப்பமயமாதலால் ஏற்படுகிறது. அதாவது பூமியின் சராசரி வெப்பத்தை விட அதிக வெப்பம் உருவாகும் போது அதை காலநிலை மாற்றம் என்று சொல்கிறோம். இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. குறிப்பாக தொழில் வளர்ச்சி. 1900க்கு முன்பு பூமியின் வெப்ப நிலை எவ்வளவு இருந்ததோ, அது 1900க்கு பிறகு வேகமாக அதிகரிக்க தொடங்கியது. ஏனெனில் இந்த காலத்தில்தான் நிலக்கரி, பெட்ரோல், இயற்கை எரிவாயு உள்ளிட்டவை மூலம் புதிய தொழிற்சாலைகள் உருவாகின.

நிலக்கரி, பெட்ரோல், இயற்கை எரிவாயு ஆகியவற்றை எரிப்பதன் மூலம் கார்பன் டை ஆக்சைடு (CO₂), மீத்தேன் (CH₄), மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு (N₂O) போன்ற வாயுக்கள் வெளியாகின. இது சூரியனிலிருந்து வரும் வெப்பத்தை வெளியேற்றாமல் தனக்குள்ளேயே வைத்துக்கொள்கிறது. இதனால் பூமியின் வெப்பம் அதிகரிக்கிறது. இது பனி உருகுவதற்கு காரமாகிறது. பனி உருகும்போது கடலின் மட்டம் அதிகரிக்கிறது. இது புயல்கள் மற்றும் மழை அளவை அதிகரிக்கிறது.

இதனால் ஏற்படும் வெள்ளம் உள்ளிட்டவை பயிர்கள், கால்நடைகள் உள்ளிட்டவற்றை அழிப்பதை மட்டுமல்லாது, புதிய நோய்கள் உருவாகவும் காரணமாக அமைந்துவிடுகின்றன.

இந்த பிரச்னையை சரி செய்யாவிட்டால், பூமியின் சுழற்சியில் கூட பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும், குடிநீர் தட்டுப்பாடு பெரும் பிரச்னையாக உருவாகி மொத்த உலகமும் அழிந்துவிடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதற்கு தமிழ்நாடு முன்னோடியாக இருந்துவிடக்கூடாது என்பது அனைவரின் கவலையாக இருக்கிறது.
Share on: