கோவையில் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் வந்த காரில் என்ன அது? அதிர்ந்த போலீசார்.. சிக்கிய 7 பேர் கும்பல்


கோவை பகுதியில் பெத்தமெட்டமைன், கொகைன் போன்ற உயர் ரக போதைப்பொருள் கடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் இருந்து போதைப் பொருளை கடத்தி வந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விற்று வந்தது தெரியவந்தது. ரூ.12 லட்சம் ரொக்கம், ரூ.50 லட்சம் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழகம் முழுக்க போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும், தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றன. தமிழக அரசும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. மத்திய போதைத் தடுப்பு பிரிவு போலீசாரும் ரகசியமாக கண்காணித்து போதைப்பொருள் விற்பனையை தடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் கோவையில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கமிஷனர் சரவணசுந்தரத்தின் உத்தரவின் பேரில், கோவை ஆர் எஸ் புரம் பூ மார்க்கெட் பகுதியில் ரகசிய கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு காரில் வந்த சிலர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை விசாரிப்பதற்காக சென்றபோது, போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர்.

இதையடுத்து தப்பி ஓட முயன்ற 7 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில், முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதையடுத்து அவர்கள் 7 பேரையும் கைது செய்த போலீசார், போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் 7 பேரும் சேர்ந்து கோவை மட்டுமல்லாமல் தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் உயர் ரக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

மேலும் இந்த சம்பவத்தில் கோவை பொருளாதார குற்றப்பிரிவில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் விஜயலட்சுமியின் மகன் மகா விஷ்ணு (வயது 28), விநாயகம், மணிகண்டன், கிருஷ்ணகாந்த், ஆதர்ஷ், ரோகன் ஷெட்டி மற்றும் ரித்திஷ் ஆகிய 7 பேர் என்பதும் தெரியவந்தது. விசாரணையில் மும்பையில் இருந்து போதைப்பொருளை கடத்தி வந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்துள்ளனர்.

இது தொடர்பாக காரில் நடத்தப்பட்ட சோதனையில், மெத்தபெட்டமைன், கொக்கைன் போன்ற உயர் ரக போதைப் பொருட்களை இவர்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. ரூ.50 லட்சம் மதிப்பிலான இந்த போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், ரூபாய் 25 லட்சம் ரொக்கம் மற்றும் 12 செல்போன்கள், 3 கார்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மொத்த பொருட்களின் மதிப்பு ரூ.80 லட்சம் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து 7 பேரும் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Share on: