செந்தில் பாலாஜியை சிக்க வைக்க புது பிளான்


அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரை எப்படியாவது அப்ரூவராக்கிவிட அவரை அமலாக்கத் துறை தீவிரமாக தேடி வருகிறார்கள் என தகவல்கள் கிடைத்துள்ளன.அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் 2011 – 2016ஆம் ஆண்டு வரை போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 1.62 கோடி பண மோசடியில் ஈடுபட்டதாக பணம் கொடுத்து ஏமாந்ததாக கூறும் கணேஷ்குமார் புகார் அளித்துள்ளார்.

அமலாக்கத் துறையும் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரும்,சிபிஐயும் தனித்தனியே 3 வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் ஜூன் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு பல்வேறு சம்பவங்களை தொடர்ந்து அவர் புழல் சிறையில் உள்ளார்.

கடந்த வாரம் அமலாக்கத் துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது அவர் தெரியாது, நினைவில்லை, ஏற்கெனவே பதில் சொல்லிவிட்டேன் உள்ளிட்ட பதில்களையே கொடுத்துவந்தார்.

ஒரு கட்டத்தில் உங்கள் செல்வாக்கு இல்லாமல் 30 கோடி ரூபாய் கரூர் நிலத்தை வெறும் ரூ 10 லட்சத்திற்கு எப்படி வாங்க முடியும் என கேட்டதற்கு செந்தில் பாலாஜி எல்லாம் என் தம்பிக்குத்தான் தெரியும் என கூறிவிட்டார். இதையடுத்து கரூரில் புதிதாக அசோக்குமார் கட்டி வரும் வீட்டின் டாக்குமென்ட்டுகளுடன் வருமாறு அசோக்குமாரின் மாமியாருக்கும் மனைவிக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.

ஏற்கெனவே 4 முறை சம்மன் அனுப்பப்பட்ட அசோக்குமாரோ தலைமறைவாக இருந்து வருகிறார்.

செந்தில் பாலாஜி எதை கேட்டாலும் தம்பிக்குத்தான் தெரியும் என கூறி வருவதால் அவரை கைது செய்ய அமலாக்கத் துறை தீவிரம் காட்டி வருகிறது. அடுத்த வாரம் அசோக்குமாரின் கால அவகாசம் முடிவடைவதால் வழக்கறிஞர் கூறியது போல் அப்போது அவரே சரணடைகிறாரா என அமலாக்கத் துறை காத்திருக்கிறது.

ஒரு வேளை சரணடையாவிட்டால் எப்படியாவது அவரை கைது செய்ய வேண்டும் என்பதற்காக அவருடைய இருப்பிடத்தை அமலாக்கத் துறை தேடி வருகிறது. அவரை எப்படியாவது அப்ரூவராக்கிவிட அமலாக்கத் துறை முயற்சித்து வருகிறது
Share on: