சென்னையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்! ஸ்டான்லி மருத்துவமனையில் மனநல மருத்துவர் மீது நோயாளி தாக்குதல்


சென்னையில் மற்றொரு மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஹரிஹரன் என்ற மனநல மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மனநல மருத்துவர் ஹரிஹரன் மீது ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நோயாளி தாக்குதல் நடத்தியுள்ளார்.

மருத்துவரை தாக்கிய நபர் திருவான்மியூரைச் சேர்ந்த பரத் (35) என்பது தெரியவந்துள்ளது. பரத் என்பவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். அதன்பிறகு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்று மருத்துவர் ஆலோசனையின் பேரில் ஸ்டான்லி மருத்துவமனை சிகிச்சைக்காக வந்து செல்கிறார்.

அந்த வகையில் இன்று சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனை வந்தபோது மருத்துவர் ஹரிஹரனை முகத்தில் குத்தி சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளி உள்ளார். இதில் காயமடைந்த மருத்துவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார்.

முன்னதாக, கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் தாய் பிரேமாவிற்கு நுரையீரல் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் கடந்தாண்டு மே முதல் நவம்பர் மாதம் வரை, சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் நிபுணர் மருத்துவர் பாலாஜியிடம் சிகிச்சை பெற்றுள்ளனர்.

ஆனால், சிகிச்சையில் தகுந்த முன்னேற்றம் ஏற்படாத நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சவிதா என்ற தனியார் மருத்துவமனையில் 3 மாத சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை, வெளிநோயாளி பிரிவில் மருத்துவரை சந்திக்க 4 பேருடன் விக்னேஷ் மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, புற்றுநோய் சிகிச்சை பிரிவில் இருந்த மருத்துவர் பாலாஜியிடம் சுமார் அரை மணிநேரம் விக்னேஷ் பேசியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில், தான் வீட்டில் இருந்து கொண்டு சென்ற கத்தியால், மருத்துவர் பாலாஜியின் இடது கழுத்தில் 2 முறை குத்தியுள்ளார். இதில், மருத்துவர் பாலாஜிக்கு ரத்தம் கொட்டியது.

படுகாயம் அடைந்த மருத்துவர் பாலாஜி, உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வெளியேற முயன்ற விக்னேஷை, பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சூழலில் ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share on: