சென்னை வேளச்சேரி ஏரியில் அரசு என்ன தான் செய்ய போகிறது.. கொதிக்கும் மக்கள்.. அங்கு நடப்பது என்ன?
சென்னை வேளச்சேரி ஏரியில் அரசு என்ன தான் செய்ய போகிறது.. ஏன் நேற்று மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.. வேளச்சேரி ஏரியை ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை கணக்கெடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தது ஏன்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த உறுதிமொழி என்ன.. சற்று விளக்கமாக பார்ப்போம்.. 265 ஏக்கர் பரப்பில் இருந்த இந்த ஏரி வெறும் 55 ஏக்கராக சுருங்கிவிட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு எடுக்கும் நடவடிக்கைளை பற்றியும் பார்ப்போம்.
சென்னை மாநகரம் வளர்ச்சிக்காக விட்டுக்கொடுக்கவே கூடாத பல விஷயங்களை விட்டுக்கொடுத்திருக்கிறது. இனிமேல் உருவாக்கவே முடியாத பல நீர் நிலைகளை அதற்காக பறிகொடுத்துள்ளது. நீர்நிலைகளை மட்டுமல்ல, நீர்வழிப்பாதைகள், வாய்க்கால்கள், அரசு நிலங்கள், பொதுப்பாதைகள், சாலைகள், காடுகள், வனப்பகுதிகள் என எல்லா இடத்தையும் பறிகொடுத்துள்ளது. அதன் காரணமாகவே வெள்ளம் வந்தால் வெளியேற வழியில்லாமல் பரிதவித்து நிற்கிறது. குறுகிய நாட்களில் மிக மிக அதிகமான மழை பெய்யும் போது, வெள்ளம் வெளியேற வழியில்லாமல் அப்படியே தேங்கிவிடுகிறது..
அப்படி வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படும் பகுதிகளில் ஒன்று தான் வேளச்சேரி. வேளச்சேரி ஏரி என்பது சென்னையின் முக்கிய ஏரிகளுள் ஒன்று . 1975ம் ஆண்டுகளில் சுமார் 265 ஏக்கர் பரப்பில் இருந்த இந்த ஏரி, அரசின் திட்டங்கள், சாலை விரிவாக்கம், மக்கள் ஆக்கிரமிப்பு என பல்வேறு காரணங்களால் 55 ஏக்கர் பரப்பிற்கு சுருங்கிவிட்டது. இதுபற்றி பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளது. 2015 வெள்ளத்திற்கு பிறகு நீர் நிலை ஆக்கிரமிப்பு விவகாரங்களில் அரசும் சரி, நீதிமன்றமும் சரி, தயவு தாட்சணை இன்றி கடுமையான நடவடிக்கைளை எடுத்து வருகின்றன. ஒரு கட்டத்தில் நீதிமன்றம், வேளச்சேரி ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் நிலைகளை மேம்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த சூழலில் இந்த ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கரையில் சுமார் 955-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. இதையடுத்து நீர்வளத்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகிய துறைகள் இணைந்து பயோ மெட்ரிக் முறையில் ஆக்கிரமிப்பு வீடுகளை கணக்கெடுக்கும் பணியை கடந்த வாரம் தொடங்கினார்கள். அதன் காரணமாக வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு அதற்கான பயோமெட்ரிக் கணக்கெடுக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டார்கள்.
இதற்கு வேளச்சேரி ஜெகநாதபுரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள், தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து வீடுகளை கணக்கெடுப்பு நடத்த விடாமல் அதிகாரிகளை தடுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடினார்கள். 3-வது நாளாக நேற்று காலை ஜெகநாதபுரம், ராஜலட்சுமி நகர், சசி நகர், காந்தி நகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்பட பொதுமக்கள் சாலையில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பயோமெட்ரிக் கணக்கு எடுப்பதை நிறுத்தும் வரை தொடர்ந்து இங்கேயே போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி அங்கேயே இருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பா.ஜனதா சார்பில் கரு.நாகராஜன், தே.மு.தி.க மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு என்று தங்களை அகற்றினால் எங்கு செல்வோம் என்று கேள்வி எழுப்பினார்கள். அப்படி அகற்றுவதாக இருந்தால் எல்லோரையும் அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இதற்கிடையில் போராட்டம் நடத்திய மக்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் மா சுப்பிரமணியன், இந்த பகுதியில் உள்ள 955 வீடுகள் பாதிக்காத வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இந்த கணக்கெடுப்பை தமிழக அரசு செய்யவில்லை. நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயம் உத்தரவின்பேரில் செய்யப்படுகிறது. இந்த பகுதிகள் நீர்நிலை பகுதியில் இல்லை என்பதை பசுமை தீர்ப்பாயத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் நிரூபிக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அந்த பணியை அரசு வக்கீல் மேற்கொண்டு வருகிறார்.
இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் மீது சட்டப்படி நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களை பதற்றம் அடைய செய்யக்கூடாது. இப்பகுதி மக்களின் வீடுகளின் எண்ணிக்கையை வைத்து நீதிமன்றத்தில் வாதாட கணக்கெடுப்பு எடுக்கப்பட்டதே தவிர வேறு எதற்காகவும் இல்லை. இங்குள்ள குடியிருப்புகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சட்ட ரீதியிலான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு பாதுகாப்பாக முதல்வரும், அரசும் இருக்கும்” என்றார். அமைச்சரின் உறுதி மொழியை ஏற்றுக்கொண்ட மக்கள், காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை சுமார் 11 மணி நேரம் நடந்த தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர்.
2007ம் ஆண்டு நீர் நிலைகளை குடியிருப்புகளை வகை மாற்றம் செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து, வேளச்சேரி ஆக்கிரமிப்பு விவகாரத்தில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றமும், பசுமை தீர்ப்பாயமும் உத்தரவிட்டுள்ளது. 2007க்கு பிறகு நீர்நிலைகளை குடியிருப்புகளாக வகை மாற்றம் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. அதற்கு முன்பு வகை மாற்றம் செய்திருந்தால் பிரச்சனை இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் அரசு எடுத்து வைக்கும் வாதத்தில் அடிப்படையில் தான் வேளச்சேரி மக்களுக்கு விடிவு பிறக்கும். ஏனெனில் பயோமெட்ரிக் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அளந்து வீடுகளால் நீர் பிடிப்பு பகுதிகளில் பாதிப்பு இல்லை என்பதையும், அந்த மக்களின் வாழ்வியல் சூழல்களையும், சிக்கல்களையும் எடுத்து வைக்க வேண்டும். அப்போது தான் இந்த மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.