சேலம் டூ வேலூர்.. டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மாதம் பல லட்சம் ரூபாய் லஞ்சம் போகுது.. சூப்பர்வைசர் தகவல்.
டாஸ்மாக் கடைகளில் சென்னை பொறுத்தவரை பாட்டிலுக்கு 10 ரூபாயும், மற்ற ஊர்களில் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையிலும் அதிகம் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக தமிழக அரசு அறிவித்தாலும், 10 ரூபாய் அதிகம் வாங்குது மட்டும் நிறுத்தப்படவே இல்லை என புகார் உள்ளது. இந்நிலையில் 10 ரூபாய் கூடுதல் பணத்தில் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மாதம் மாதம் லஞ்சம் கிடைப்பதாக சூப்பர்வைசர் ஒருவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சுமார் 4,300 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படுகின்றன. இதுதவிர தமிழ்நாட்டில் மனமகிழ் மன்றங்கள் 1,480 என்கிற அளவில் செயல்படுகிறது. இதுபோன தனியார் பார்கள், ஓட்டல்கள், பப்கள் செயல்படுகின்றன. மொத்தம் உள்ள 4300 டாஸ்மாக் கடைகளில் 3 ஆயிரம் கடைகளுக்கு அருகிலேயே மது அருந்தி செல்வதற்கான பார் வசதிகள் உள்ளன.தமிழ்நாட்டில் பொதுவாகவே டாஸ்மாக் கடைகளில் விற்பனை விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வரை வசூலிப்பதாக புகார்கள் உள்ளது. அரசு இந்த விவகாரத்தில் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்தாலும் 10 ரூபாய் கூடுதலாக வாங்குவது என்பது குறையவே இல்லை..
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சோமநாயக்கன் பட்டி கிராமத்தில் உள்ள அரசு மதுபானக்கடையில் பணியாற்றும் சூப்பர் வைசர் ராகவன் என்பவர், வாடிக்கையாளர்களிடம் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கூடுதலாக வசூலிப்பதாக கூறி, வாடிக்கையாளர் ஒருவர் அவரிடம் செல்போனில் வீடியோ எடுத்தபடி வாக்குவாதம் செய்தார்.
அப்போது சூப்பர்வைசர் ராகவன், யார் நீ, எங்கே வேலை செய்கிறாய்.. என்னை கேட்பதற்கு நீ யார் என்று கேள்வி எழுப்பினார்.. அதற்கு வாடிக்கையாளரோ, நான் பொதுமக்களில் ஒருவன், இதனை நான் தான் கேட்பேன். இதனிடையே பேச மறுத்த சூப்பர் வைசர் பின்னர் மனக்குமுறலாக சில விஷயங்களை பேசினார். அதன்படி கூடுதலாக வசூலிக்கப்படும் 10 ரூபாய் லஞ்ச பணத்தில் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மாதம் மாதம் எவ்வளவு தரப்படுகிறது என்பதை விவரித்தார்.
அப்போது சேலம் எஸ்ஆர்எம்க்கு (மண்டல அதிகாரி) மாதம் மாதம் தொழிற்சங்கம் மூலம் 3000 தரப்படுவதாக சூப்பர் வைசர் கூறினார். மேலும் சேலம் அதிகாரி கட்டுப்பாட்டில் 500 டாஸ்மாக் கடைகளில் இருக்கிறது என்றும் ஒரு கடைக்கு மாதம் 3000 என்றால், 500 கடைக்கு எவ்வளவு போகும் என்பதை நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறினார். அவர் கூறியபடி பார்த்தால் மாதம் 15 லட்சம் ரூபாய் பணம் போவதாக கூறப்படுகிறது.
இதுதவிர டிரான்ஸ்பர் மற்றும் பணியில் ஒருவரை போடுவதற்கு தனியாக தொகையை தர வேண்டும். ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்கள் அந்த அதிகாரியின் கட்டுப்பாட்டில் வரும் என்றார். மேலும் இப்போது உள்ள அதிகாரி பெண் ஆவார். அவர் ஒருமுறை கூட கடை பக்கமும் வந்தது இல்லை என்று கூறிய சூப்பர் வைசர்,. அவர் பெயரை சொல்லி வரும் நபர்கள் வசூலித்து சென்று விடுகிறார்கள் என்றார். இதுபோக ஆடிட் வருவோருக்கு பணம் தர வேண்டும் என்று கூறினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் தரப்பில் விரைவில் விளக்கங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இதேபோல் முன்பும் லஞ்சம் குறித்த புகார்கள் வந்த போது அதனை அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்திருந்தார்கள்.