டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் வீடுகளில் மீண்டும் ரெய்டு!


மதுபானங்கள் விற்பனை மற்றும் கொள்முதலில், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரில், ‘டாஸ்மாக்’ நிர்வாக இயக்குநர் விசாகன் உட்பட உயர் அதிகாரிகளின் வீடுகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் ‘ரெய்டு’ நடத்தினர்.

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, கடந்த மார்ச் 6 முதல், 8ம் தேதி வரை, சென்னை எழும்பூரில் உள்ள ‘டாஸ்மாக்’ தலைமை அலுவலகம் மற்றும் எஸ்.என்.ஜே., உள்ளிட்ட மதுபான நிறுவனங்கள், மதுபான ஆலைகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

விசாரணை

அப்போது, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இருந்து, ‘டெண்டர்’ ஒதுக்கீடு ஆணைகள், மதுபான விலை நிர்ணய கடிதங்கள், மதுக் கூடம் உரிமம் வழங்குவது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றினர்.

அத்துடன், கடந்த நான்கு ஆண்டுகளில், மதுபான ஆலைகளில் இருந்து கடைகளுக்கு மது பாட்டில்களை எடுத்துச் செல்வதற்கான வாகன டெண்டர் ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.

அதேபோல, பாட்டிலுக்கு, 10 – 30 ரூபாய் வரை கொள்முதல் விலையை உயர்த்தி பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணங்களையும் கைப்பற்றினர்.

அதன் அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியான, டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விசாகன், டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் மொத்த விற்பனை பிரிவு பொது மேலாளர் சங்கீதா, கொள்முதல் மற்றும் விற்பனை பிரிவு துணை பொது மேலாளர் ஜோதிசங்கர், சில்லரை விற்பனை பிரிவு பொது மேலாளர் ராமதுரைமுருகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

மூவரின் மொபைல் போன்கள், இ – மெயில் தகவல்களையும் ஆய்வு செய்தனர்.

சோதனையில் கிடைத்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை கூறியது.

இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, விசாகன் உள்ளிட்ட மூன்று அதிகாரிகளுக்கு, ‘சம்மன்’ அனுப்பப்பட்டது.
Share on: