தப்பி ஓடிய பிரதமர்… வங்க தேசத்தில் நடப்பது என்ன?
இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள், ஒரு கட்டத்தில் வங்க தேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று தலைநகரம் டாக்காவை நோக்கி ஊர்வலம் கிளம்பினார்கள். கடந்த ஜூலை 18 முதல் வங்க தேசம் கொந்தளிப்பில் இருக்கிறது. வங்க தேசத்தின் சுதந்திரத்துக்காகப் போராடியவர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் 30 சதவிகிதம் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து வன்முறை வெடித்தது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சுடப்பட்டு இறந்திருக்கிறார்கள். ஊரடங்கு உத்தரவு போட்டாலும் மாணவர்கள் வீதிக்கு வந்து போராடினார்கள்.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் காயமடைந்தாலும் போராட்டம் ஓயவில்லை. திரை நட்சத்திரங்கள் முதல் முன்னாள் ராணுவ அதிகாரிகள் வரை அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க, ஒரு கட்டத்தில் அவர்களை அடக்கிய ராணுவம் பின்வாங்கியது. அதன் விளைவாக அவர்கள் உற்சாகமாக தலைநகருக்குக் கிளம்ப, பிரதமர் ஷேக் ஹசீனா தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டே ஓடியிருக்கிறார். நாடு முழுக்க போராட்டக்காரர்கள் அரசு அலுவலகங்களை அடித்து நொறுக்கி தங்கள் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்.
20 ஆண்டுகள் வங்க தேசத்தின் பிரதமராக இருந்தவர், ஒரு நாட்டின் ஆட்சியாளராக அதிக காலம் இருந்த பெண் தலைவர் என்றெல்லாம் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் ஹசீனா. ஐந்தாவது முறையாக சில மாதங்களுக்கு முன்புதான் தேர்தலில் ஜெயித்து பிரதமர் ஆனார். ஆனாலும் மக்கள் போராட்டம் அவர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது. அவருக்கு ஏன் இந்த நிலை? அதற்கு வங்க தேசத்தின் வரலாற்றைக் கொஞ்சம் பார்க்க வேண்டும். இந்திய – பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தான் வசம் சென்றது கிழக்கு வங்காளம். அதாவது, இந்தியாவின் மேற்கிலும் கிழக்கிலுமாக இரண்டு நிலப்பரப்புகள் பாகிஸ்தான் என்ற நாடாக இருந்தன. மேற்கில் இருந்த பாகிஸ்தான் அரசியல்வாதிகளுக்கு இந்தக் கிழக்கு நிலத்தின்மீது இளக்காரம் இருந்தது.
கிழக்கு வங்காளத்தில் இருக்கும் மக்கள் வங்க மொழி பேசினர். ஆனால், பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ மொழியாக உருது மட்டுமே இருக்கும் என்று அரசு அறிவித்தது. இதை எதிர்த்து டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 1952 பிப்ரவரி 21-ம் தேதி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன்பின்னும் அடங்காத மாணவர் போராட்டத்துக்கு அரசு பணிந்தது. ஒரு மொழியின் உரிமைக்காக உலகில் நடைபெற்ற மிகத் தீவிரமான போராட்டமாக அது கருதப்படுகிறது. அதன் அடையாளமாகவே பிப்ரவரி 21-ம் தேதியை சர்வதேச தாய்மொழி தினமாக யுனெஸ்கோ அறிவித்தது.
அந்த மொழி உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான். அதன் தொடர்ச்சியாக அவாமி லீக் கட்சியை ஆரம்பித்தார். பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் தொடர்ந்து கிழக்கு வங்காளத்தை புறக்கணிப்பதை எதிர்த்து அரசியல் போராட்டங்கள் நடத்திய அவர், ஒரு கட்டத்தில் ‘வங்கம் சுதந்திரம் அடைவதைத் தவிர இதற்கு வேறு தீர்வு இல்லை’ என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் இந்தப் பகுதியில் பெரும் அடக்குமுறையில் ஈடுபட்டது. அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் தலையீட்டால் அங்கு அமைதி பிறந்தது. வங்க தேசம் என்ற புதிய நாடு உருவானது.
இந்த நாட்டின் சுதந்திரத்துக்குப் போராடியவர் என்பதால் ‘வங்கத்தின் நண்பன்’ என்று பொருள்படும் வகையில் ‘வங்கபந்து’ என்று அழைக்கப்படுகிறார் முஜிபுர் ரஹ்மான். வங்க தேச மக்களுக்கு அவர்மீது மிகுந்த மரியாதை உண்டு. சுதந்திர வங்க தேசத்தின் பிரதமராகவும், பிறகு ஜனாதிபதியாகவும் இருந்தவரை ராணுவப் புரட்சி செய்து கொன்றார்கள். அப்போது முஜிபுர் ரஹ்மானின் குடும்பமே ராணுவத்தால் கொல்லப்பட, வெளிநாட்டில் இருந்த முஜிபுரின் மகள் ஷேக் ஹசீனாவும் அவர் தங்கை ஷேக் ரெஹானாவும் மட்டுமே உயிர் பிழைத்தார்கள்.
பாகிஸ்தான் போலவே ராணுவ ஆட்சியில் சிக்கிக்கொள்ளும் ஒரு நாடாக வங்க தேசம் இருக்கிறது. இந்த ராணுவ ஆட்சிக்காலத்தில் ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்தது இந்தியா. ஆறு ஆண்டுகள் இங்கே இருந்தபடி தன் நாட்டில் மீண்டும் ஜனநாயகம் மலர்வதற்காகப் போராடிய ஹசீனா, அவாமி லீக் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு வங்க தேசத்துக்குப் போனார். பத்தாண்டு காலம் அங்கேயும் இருந்தபடி ஜனநாயகப் போராட்டம் நடத்தினார். பெரும்பாலான காலம் வீட்டுச்சிறையில் இருந்தார். கடந்த 1996-ம் ஆண்டு முதல்முறையாக பிரதமர் ஆனார்.
பிறகு தோல்விகள்… 2009-ம் ஆண்டு அவர் மீண்டும் பிரதமர் ஆனார். அதன்பின் அந்த நாற்காலியிலிருந்து இப்போதுதான் இறங்கியிருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் வங்க தேசம் பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக ஜவுளி ஏற்றுமதி அங்கு லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தது. இந்தியாவைவிட தனிநபர் வருமானம் அதிகம் கொண்ட நாடாக அது வளர்ந்தது. ஆனால், கொரோனா பேரிடரும், அதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் உக்ரைன் யுத்தமும் ஐரோப்பாவை பெரிதும் பாதித்தன. அதன் விளைவாக வங்க தேசத்தின் ஜவுளித் தொழில் வீழ்ச்சி கண்டது.
இளைஞர்கள் அதிகம் இருக்கும் ஒரு நாட்டில் வேலைவாய்ப்பும் பொருளாதார வளர்ச்சியும் இல்லாமல் போனால், கலகம் ஏற்படும். அதுதான் இப்போது வங்க தேசத்தில் நடந்திருக்கிறது. தொடர்ச்சியாகத் தேர்தல்களில் வெல்வதற்காக எதிர்க்கட்சிகளைக் கடுமையாக நசுக்கினார் ஷேக் ஹசீனா. முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியக் கட்சியின் தலைவி கலிதா ஜியா உள்பட பல தலைவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டனர். வேறு சில கட்சிகளுக்குத் தேர்தலில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. ஒருகாலத்தில் ஜனநாயகத்துக்காக போராடிய ஷேக் ஹசீனா இப்போது சர்வாதிகாரியாக மாறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. தனக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை ராணுவத்தையும் போலீஸையும் வைத்து நசுக்கினார் ஷேக் ஹசீனா.
இந்த நேரத்தில் நடைபெற்ற இன்னொரு சம்பவம்தான் அவர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது. வங்கதேச விடுதலைக்காகப் போராடியவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 30% இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு உத்தரவு போடப்பட்டது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அது அமலாகவில்லை. இந்நிலையில் அதை அமல்படுத்த வேண்டும் என்று சிலர் நீதிமன்றம் போய் தீர்ப்பு வாங்கினார்கள்.
ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிதான் வங்க தேச சுதந்திரத்துக்காகப் போராடியது. இயல்பாகவே, தன் கட்சியில் இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதற்கு பிரதமர் இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்திக்கொள்வார் என்று மக்களிடம் எதிர்ப்பு எழுந்தது. ஏற்கெனவே வேலைவாய்ப்பு இல்லாமல் விரக்தியில் இருந்த இளைஞர்களும் மாணவர்களும் வீதியில் இறங்கிப் போராடினார்கள். ஆயிரக்கணக்கானவர்களைக் கைது செய்தும், நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றும் போராட்டத்தை அடக்க முயன்றது அரசு. ஆனால், போராட்டம் நிற்கவில்லை.
இதனிடையே வங்க தேச உச்ச நீதிமன்றம் தலையிட்டு, சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் இட ஒதுக்கீட்டை ஐந்து சதவிகிதமாகக் குறைத்தது. ஆனாலும் மாணவர்களை அது திருப்திப்படுத்தவில்லை. அந்தப் போராட்டம்தான் ஷேக் ஹசீனாவைத் தூக்கி எறிந்திருக்கிறது. வங்க தேச ராணுவத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் ஏறி இந்தியாவுக்கு வந்து தஞ்சம் புகுந்திருக்கிறார் ஹசீனா.
இந்தியாவுக்கும் வங்க தேசத்துக்கும் தொப்புள்கொடி உறவு உண்டு. அந்த தேசத்தை உருவாக்கித் தந்த தாய் இந்தியா. குறிப்பாக ஹசீனா எப்போதும் இந்தியாவுக்கு நெருக்கமாக இருப்பார். பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்புக்கு வங்க தேசத்தில் வலுவான தளம் உண்டு. வங்க தேசத்தில் சமீப ஆண்டுகளில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் பெருகியிருப்பதில் ஐ.எஸ்.ஐ அமைப்புக்குப் பங்கு உண்டு. அங்கு செயல்படும் ஜமாத் – இ – இஸ்லாமி கட்சிக்கும் ஐ.எஸ்.ஐ அமைப்புக்கும் நெருக்கம் இருக்கிறது.
அந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக நிகழ்த்தப்படும் சதிகளை முறியடிக்க உதவியவர் ஹசீனா. இந்தியாவுக்கும் வங்க தேசத்துக்குமான எல்லை என்பது 4,096 கி.மீ தூரத்துக்கு நீள்கிறது. இதில் பல இடங்களில் தடுப்பு வேலிகள் கூட கிடையாது. இந்தியாவுக்கு எதிரான ஓர் அரசு அங்கு அமைவது நம் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
சீனாவும்கூட சமீப ஆண்டுகளில் வங்க தேசத்துக்கு பல உதவிகள் செய்து தன் செல்வாக்கை நிலைநாட்ட பல வழிகளில் முயன்று வருகிறது. நதிகளைத் தூர்வாருவது, துறைமுகம் கட்டுவது, விமான நிலையங்களை சீரமைப்பது என்று பல திட்டங்களை சீனா அங்கு செய்கிறது. ஏற்கனவே மியான்மரும் சீனாவின் அரவணைப்பில் இருக்கும் நிலையில், வங்க தேசமும் ஆட்சி மாற்றத்தால் சீனாவுக்கு நெருக்கமாகப் போய்விட்டால் நமக்கு சங்கடங்கள் அதிகமாகும். அதனால்தான் வங்க தேசத்தில் நிலவும் கொந்தளிப்பு நம்மைக் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.