
தமிழகம் முழுவதும் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் மாநிலத்தில் மொத்தம் 6.27 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதி எது? குறைந்த வாக்காளர்கள் உள்ள தொகுதி எது? என்பது பற்றிய முக்கிய தகவலும் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் 18 வயது பூர்த்தியானவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து ஓட்டளிக்கும் உரிமையை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி கொடுத்து வருகிறது. அந்த வகையில் 2025 ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தபணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி முதல் கடந்த 18 ம் தேதி வரை பல்வேறு பணிகள் நடந்தது.
குறிப்பாக வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை வாக்குச்சாவடி நிலை அலுவலர் சரிபார்த்தனர். அதோடு வாக்குச்சாவடி மறுசீரமைப்பு, வாக்காளர் பட்டியல் மற்றும் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், தேர்தல் ஆணைய உத்தரவுப்படி வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் என்பது www.elections.tn.gov.in எனும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வரைவு வாக்காளர் பட்டியலின்படி பார்த்தால் தமிழகத்தில் மொத்தம் 6.27 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை என்பது 3.07 கோடியாக உள்ளது. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை என்பது 3.19 கோடியாக இருக்கிறது. இதன்மூலம் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளனர். 3ம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை என்பது 8,964 என்று உள்ளது.
அதேபோல் ஒரு தொகுதியில் அதிகபட்ச வாக்காளர்கள் உள்ளனர் என்றால் அந்த தொகுதியின் பெயர் சோழிங்கநல்லூர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதியில் மொத்தம் 6.76 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை என்பது 3.38 லட்சமாகவும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.37 லட்சமாகவும் உள்ளது. 3 ம் பாலினத்தவர்கள் 125 பேர் உள்ளனர்.
மேலும் குறைந்த வாக்காளர்கள் என்றால் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டசபை தொகுதியில் தான் உள்ளனர். இந்த தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை என்பது 1.73 லட்சம் என்ற அளவில் உள்ளது. இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 85,065 ஆக உள்ளது. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை என்பது 88,162 ஆக உள்ளது. 3ம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 3 என்று உள்ளது.
அதேபோல் சென்னை மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் வெளியிட்டார். சென்னை மாவட்டத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளில் 19.41 லட்சம் ஆண்கள், 20.09 லட்சம் பெண் வாக்காளர்கள் உள்ளனர். சென்னையில் மொத்தம் 39,52,498 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இன்று வெளியான வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. அதனை பொதுமக்கள் பார்த்து தங்களின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம். ஒருவேளை பெயர் விடுபட்டு இருந்தால் 16.11.2024, 17.11.2024, 23.11.2024, 24.11.2024 உள்ளிட்ட தேதிகளில் வாக்குச்சாவடிகளில் நடக்கும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று சேர்க்கலாம். அதேபோல் 2025 ஜனவரியில் 18 வயதை எட்ட உள்ளவர்களும் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யவும், திருத்தம் செய்யவும் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளலாம்.