திடீரென கோரிக்கை வைத்த செந்தில் பாலாஜி.. மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்!


முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், மனுவை திரும்பப் பெறுவதாக செந்தில் பாலாஜி தரப்பு தெரிவித்தது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரிய மனுவை திரும்ப பெறுவதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது வரை சிறையில் இருந்து வருகிறார் செந்தில் பாலாஜி. தொடர்ந்து ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், மா.கவுதமன், சாட்சிகளின் விசாரணை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கிவிட்டதால் இந்த மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெறுவதாக கூறினார்.

இதனை ஏற்றுக்கொண்ட சென்னை ஐகோர்ட் நீதிபதிகள், செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Share on: