
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக பேருந்தை திருப்பியபோது அரசுப் பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் 32 க்கும் மேற்பட்ட பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் சாலை விபத்து சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சாலை பாதுகாப்பு குறித்து அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் தொடர்ந்து விபத்துகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒருவரின் அலட்சியம் ஒரு குடும்பத்தினரையே பாதிக்கும் என்பதை அறியாமல் பலரும் மிகவும் பொறுப்பில்லாமல் வாகனங்களை இயக்குகின்றனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க அரசுப் பேருந்தை திருப்பியபோது மரத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 32 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நத்தம், திண்டுக்கல், மதுரை அரசு மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள கோட்டைப்பட்டியில் இருந்து அரசுப் பேருந்து இன்று புறப்பட்டுள்ளது. கோட்டைப்பட்டியில் இருந்து நத்தம் நோக்கிச் செல்லும் இந்த அரசுப் பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர். இந்தப் பேருந்தை கோபால்பட்டியைச் சேர்ந்த ஓட்டுநரான மோகன் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில், புதுப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது அரசுப் பேருந்தின் முன்னால் இருசக்கர வாகனம் ஒன்று சென்றுக்கொண்டிருந்துள்ளது, அப்போது, இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க அரசுப் பேருந்து ஓட்டுநர் பேருந்தை திருப்பியுள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து அப்பகுதியில் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 32 பேர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் இருந்தவர்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் 7 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 25 பேர் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.