திமுகவை போல அலட்டிக் கொள்ளாமல் சரித்திர சாதனை படைத்த எம்.ஜி.ஆர்..!


சாமான்யருக்கான சமூகத் திட்டங்கள். எம் ஜி ஆர் கொண்டு வந்த நலத் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள், கடுமையான விமர்சனங்கள், கண்டனங்களை முன்வைத்தன. எல்லாரும் சொன்ன பொதுவான குற்றச்சாட்டு – ‘அரசுப் பணம் வீணாகிறது’. ‘இலவசங்கள் கொடுத்து அரசுக் கருவூலத்தைக் காலி செய்கிறார்’!

இந்தப் புகார்களுக்கு எல்லாம், பல்லாண்டுகளுக்கு முன்பே பதில் கூறி விட்டார் எம்.ஜி.ஆர். தனது சொந்தத் தயாரிப்பான ‘நாடோடி மன்னன்’ படத்தில் கூறுவார்:’மக்களிடம் இருந்து பெற்ற வரிப் பணத்தை மக்களுக்காகச் செலவிடுகிறோம்.’இதில் வேடிக்கை என்னவென்றால், இடையில் அவ்வப்போது ஆட்சிக்கு வந்து போன தி.மு.க.வால் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த திட்டங்கள் எதிலும் கைவைக்க முடியவில்லை. காரணம், இவற்றால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட நற்பயன்கள். உதாரணத்துக்கு, சத்துணவுத் திட்டம். சத்துணவு சாப்பிட்ட குழந்தைகள் இரத்த வாந்தி எடுத்தனர் என்றெல்லாம், தனது ஆதரவு நாளிதழ் மூலம், பீதியைப் பரப்பியவர்கள், ஆட்சிக்கு வந்து ஏன் அந்தத் திட்டத்தைக் கைவிடவில்லை..? வலுவான காரணம் இருந்தது.

சத்துணவுத் திட்டம் அமலாக்கப்பட்ட முதல் ஆண்டில், சுமார் 2,63,000 குழந்தைகள் புதிதாக பள்ளிகளில் சேர்ந்தனர். அடுத்த ஆண்டில், 2,68,000 பேர் சேர்ந்தனர். எம்.ஜி.ஆர். மறைந்த 1987இல், தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 100% என்று உச்சத்தைத் தொட்டு இருந்தது. ‘பள்ளிக் கூடத்தின் பக்கம்’ போகாதவர்களே இல்லை என்கிற நிலையை ஏற்படுத்தியது எம்.ஜி.ஆர். ஆட்சி. இந்தச் சாதனையில், சத்துணவுத் திட்டம் மிக முக்கிய பங்கு வகித்தது. இதேபோன்று, மேலும் பல திட்டங்களும் காரணம் ஆகும்.

அவற்றில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது – பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச காலணி திட்டம். தமிழ்நாட்டில் பல ஊர்களில் பல பகுதிகளில் சாதிய அடக்குமுறை மேலோங்கி இருந்தது.காலில் செருப்பு அணிந்து கொண்டு ஊருக்குள் நடந்து செல்ல முடியாத அவலநிலை இருந்தது. மாற்றி அமைக்க எண்ணினார் எம்.ஜி.ஆர். பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசக் காலணி வழங்கினார். அதனை அணிந்து கொண்டு,’எம்.ஜி.ஆரு குடுத்தது’ என்று ஆனந்தமாய்க் கூறியபடி ஊருக்குள் சுற்றி வர முடிந்தது. மௌனமாய் ஒரு மிகப் பெரிய சமுதாயப் புரட்சியை நடத்திக் காட்டினார் மக்கள் திலகம்.

சாதிக்கு எதிராகப் போராடுவதாக சொல்லிக் கொல்லும்… மன்னிக்கவும், சொல்லிக் கொள்ளும் கட்சி, தான் ஆட்சியில் இருந்த போது செய்யத் துணியாத காரியத்தை, எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி, எவருடைய எதிர்ப்பும் இல்லாமல், அமைதியாக செய்து முடித்தார் எம்.ஜி.ஆர். சாதிகளை மறந்து அ.தி.மு.க. பக்கம் மக்கள் நிற்பதற்கு முழுமுதற் காரணமே சாதிகளைக் கடந்த அதன் பார்வைதான். எம்.ஜி.ஆர். இட்ட அடித்தளம், ஜெயலலிதா எழுப்பிய கற்கோட்டை, மக்களின் பேராதரவு பெற்று விளங்குவதற்குக் காரணமே சாதிகளுக்கு அப்பாற்பட்டு எல்லாருக்கும் பொதுவான இயக்கமாக அது இருப்பதுதான்.

இந்தச் சமயத்தில் சத்துணவு திட்டம் குறித்த இன்னொரு தகவலையும் குறிப்பிட வேண்டும். இந்தத் திட்டம் அறிமுகமான ஆண்டிலேயே, 17.4 லட்சம் (13.7%) எஸ்.சி., எஸ்.டி. பிள்ளைகள், இதனால் பயன் பெற்றனர்; ஒரு மிகப் பெரிய சமூக, பொருளாதார பிரசினைக்கு சுமுகமான நிரந்தரத் தீர்வு கண்டார் எம்.ஜி.ஆர். சாதிய ஏற்றத் தாழ்வுகளை முற்றிலுமாகக் களைந்து சமதர்ம சமுதாயமாகத் தமிழ்நாடு மலர வேண்டும் என்பதில், உண்மையான அக்கறை கொண்ட இயக்கமாக அதிமுக இருப்பதால், அனைத்து சாதிப் பிள்ளைகளும் ஆரோக்கியத்துடன், தரமான கல்வி பெற்று வாழ்க்கையில் உயர்வதற்கான திட்டங்களை அடுக்கடுக்காய் நிறைவேற்றி வருகிறது.

பெருந்தலைவர் காமராஜர் ஆற்றிய அரும் பணியால் 1976-77இல், ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் 942 இருந்தன. இவற்றில் உயர்நிலைப் பள்ளிகள் (High Schools) 21; நடுநிலைப் பள்ளிகள் – 80; தொடக்கப் பள்ளிகள் – 841. இந்தச் சிறப்புப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 1,65,822 பேர். எம்.ஜி.ஆர். அமரரான போது என்ன நிலைமை..? எந்த அளவுக்குத் தரம் உயர்த்தப் பட்டன பாருங்கள்: மேல்நிலைப் பள்ளிகள் – 963; உயர்நிலைப் பள்ளிகள் – 51; தொடக்கப் பள்ளிகள் – 844. மொத்தம் – 963. பயன் பெற்றவர்கள் – ஆண் பிள்ளைகள் – 124503; பெண் பிள்ளைகள் – 104018. மொத்தம் – 2,28,521.

இப்பள்ளிகளில் 1 – 8ஆம் வகுப்பு படித்த அத்தனை பேருக்கும், ஆண்டுதோறும் இலவச சீருடைகள், இரண்டு வழங்கப்பட்டன. அரசு நடத்திய விடுதிகளில் (‘ஹாஸ்டல்’) தங்கிப் படித்த அனைவருக்கும் கூட இலவச சீருடை வழங்கப் பட்டது. இலவச புத்தகங்கள், நோட்டுகள் வழங்கும் திட்டம் அமலாக்கப் பட்டது. தொழிற் பயிற்சி பெறுவோருக்கு தொழிர்கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) திட்டமும் அறிமுகப் படுத்தப் பட்டு, 5,50,000 பேருக்கு உதவி தரப் பட்டது.
Share on: