தூத்துக்குடி டூ மேட்டுப்பாளையம் ரயில்.. எங்கெல்லாம் நின்று செல்லும்.. நாளை முதல் சேவை தொடக்கம்.
தூத்துக்குடியில் இருந்து கோவை வழியாக மேட்டுப்பாளையத்திற்கு நாளை முதல் வாரத்திற்கு இரண்டு நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் எந்தெந்த ரயில் நிலையங்களில் நின்று செல்லும், எத்தனை மணிக்கு புறப்படும் என்பது போன்ற விவரங்களை ரயில்வே வெளியிட்டுள்ளது. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
தென் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பலரும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபார நிமித்தமாகவும் தொழில் நிமித்தமாகவும் பயணிக்கிறார்கள். நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் செல்வது என்றால் இவர்கள் கோவை வந்து அங்கிருந்து ரயில் அல்லது பேருந்துகளை பிடித்து தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பயண நேரம் அதிகமாவதால் தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு நேரடி ரயில்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது.
தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் ரயில்: குறிப்பாக துத்துக்குடிக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயிலை விரைவில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து தான் தற்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வாரம் 2 முறை சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி வருகிற 19 ம் தேதி முதல் இந்த ரயில் சேவை தொடங்க உள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.
நாளை முதல் சேவை: முதல் சிறப்பு ரயிலை மேட்டுப்பாளையத்தில் இருந்து மத்திய அமைச்சர் எல். முருகன் மேட்டுப்பாளையத்தில் தொடங்கி வைக்க இருக்கிறார். இந்த ரயிலானது வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும். மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில் கோவை வழியாக அதிகாலை 4.20 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும்.
மேட்டுப்பாளையத்தில் இரவு 7.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில் கோவைக்கு 8.20 க்கு வந்து சேரும். கோவை ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நிற்கும். பின்னர் அங்கிருந்து 8.25 மணிக்கு புறப்பட்டு கிணத்துக்குடவுக்கு 9.14 மணிக்கு வந்து 9.15 மணிக்கு புறப்படும். பொள்ளாச்சிக்கு 9.30 மணிக்கு வரும் ரயில் 5 நிமிடங்கள் நிற்கும்.
பின்னர் பொள்ளாச்சியில் இருந்து 9.35 மணிக்கு புறப்பட்டு செல்லும் ரயில் உடுமைலைப்பேட்டை, பழனி, ஒட்டன் சத்திரம், திண்டுக்கல் வழியாக மதுரைக்கு இந்த ரயில் நள்ளிரவு 1.25 மணிக்கு வரும். 5 நிமிடங்கள் மதுரையில் நின்று செல்லும் இந்த ரயில் விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வழியாக அதிகாலை 4.20 மணிக்கு தூத்துக்குடிக்கு வரும்.
தூத்துக்குடியில் இருந்து: மறுமார்க்கத்தில் தூத்துகுடியில் இருந்து வியாழன், சனிக்கிழமைகளில் இயக்கப்படும். தூத்துக்குடியில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில், விருதுநகர், சாத்தூர் வழியாக மதுரைக்கு நள்ளிரவு 1.20 மணிக்கு வந்து சேரும்.
மதுரையில் இருந்து 1.25 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல், ஒட்டன் சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை வழியாக பொள்ளாச்சிகு அதிகாலை 4.45 மணிக்கு வரும். 5 நிமிடங்கள் நிற்கும் இந்த ரயில் பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு வழியாக கோவைக்கு காலை 6.30 மணிக்கு வரும். 6.35 க்கு கோவையில் இருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு 7.40 மணிக்கு வந்து சேரும்.