தைரியம் இருந்தால் அதிமுகவிலிருந்து செங்கோட்டையனை ஈபிஎஸ் நீக்கி பார்க்கட்டும்”- கே.சி.பழனிசாமி


எடப்பாடி பழனிசாமி தைரியம் இருந்தால் செங்கோட்டையனை நீக்கி பார்க்கட்டும் என தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிச்சாமி செங்கோட்டையனை நீக்கினால் எடப்பாடி தலைமை இருக்காது என எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். அதிருப்தியில் இன்றைக்கு செங்கோட்டையன் ஆரம்பித்திருக்கிறார். இனி தொடர்ச்சியாக பலர் வருவார்கள் என கே.சி.பழனிசாமி கூறினார்.

கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி, “எடப்பாடி பழனிச்சாமி குறித்து செங்கோட்டையன் பதிலளிக்காமல் சென்றது, அவர் இன்னும் திருப்தியடையவில்லை என்பதை காட்டுகிறது. தைரியம் இருந்தால் எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை நீக்கி பார்க்கட்டும். எடப்பாடி பழனிச்சாமி இந்த இயக்கத்தை ஒருங்கிணைக்கத் தவறினார், சுயநலத்துடன் நடந்து கொள்கிறார். அதிமுகவில் எல்லோரும் ஒன்றிணைக்கபட வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கிறோம். உலகமே அதைத்தான் எதிர்பார்க்கிறது, ஆனால் ஒரு ஆளுக்கு மட்டும் அது புரிய மாட்டிங்கிறது. திமுகவே மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மறைமுக ஒத்துழைப்பு தருகிறாரோ எனத்தான் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் பேசுகின்றனர்.

செங்கோட்டையனை நீக்கினால் எடப்பாடி தலைமை இருக்காது, அன்னூரில் நடந்த பாரட்டு விழா மட்டுமே பிரச்சனை அல்ல, அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பலமாக இல்லை என்ற கருத்து தான் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நீடிக்க மாட்டார், அதிமுகவில் ஏற்பட்டிருக்கிற உட்கட்சி குழப்பம், கட்சியை ஒருங்கிணைக்க தவறுகின்ற எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளால் தான், திமுக செல்வாக்கு பெற்றதாக இருக்கிறது.திமுக மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றதாக இல்லை” என்றார்.
Share on: