தொண்டர்கள் மோதல்.. ஆந்திராவில் வெடித்த வன்முறை.. சித்தூரில் பந்த்.. தமிழக பயணிகள் தவிப்பு!


தெலுங்கு தேசம் கட்சி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. கலவரம் மேலும் பரவாமல் தடுக்க 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. வன்முறையால் சித்தூர் மாவட்டத்தில் முழு அடைப்பு நடப்பதால் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் திருப்பதியில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகள் இயங்காததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சித்தூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அங்கு வந்த காவல்துறையினர் இரண்டு கட்சி தொண்டர்களையும் அடித்து விரட்டினர் இதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். அப்போது தொண்டர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் பெண் காவல்துறையினர் காயம் அடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த சந்திரபாபு நாயுடு வாகனத்தின் மீது ஏறி ஆவேசமாக உரையாற்றினார். அவரை சூழ்ந்து நின்று சிறப்பு பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பு அளித்தனர். இதனால் பதற்றம் அதிகரித்தது. கலவரம் மேலும் பரவாமல் தடுக்க காவல்துறையினர் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர்.

இதன் காரணமாக தமிழகம் ஆந்திரா இடையே போக்குவரத்தை நிறுத்தப்பட்டுள்ளது. வேலூர் பேருந்து நிலையத்தில் 30 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. திருப்பதியில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகளும் இயங்காததால் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
Share on: