தொழிலாளர்களின் போராட்டத்தால் 100 மில்லியன் டாலர் இழப்பு- ஹைகோர்ட்டில் சாம்சங் வாதம்
தொழிலாளர் போராட்டத்தால் நூறு மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தெரிவித்தநிலையில், தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமை என தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், சிஐடியு தொழிற்சங்க இணைப்பு பெற்ற சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில், தொழிற்சங்கத்தை துவங்கி, அதை பதிவு செய்யக் கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தங்கள் தொழில் சங்கத்தை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சங்கத்தின் எல்லன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், நிறுவனத்தின் பெயரை தொழிற்சங்கத்திற்கு பயன்படுத்தக் கூடாது என சாம்சங் நிறுவனத்தின் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் தங்கள் தொழிற்சங்கத்தை அரசு பதிவு செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் விண்ணப்பத்தை பரிசீலித்து தொழிற்சங்கத்தை பதிவு செய்து சான்று வழங்கும்படி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் சாம்சங் நிறுவனம் பெயரில் தொழிற்சங்கம் துவங்க அந்த நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளதாகவும் இது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது .
இதையடுத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது சாம்சங் நிறுவனம் சார்பில் ஆஜராக மூத்த விளக்கின் ஜி ராஜகோபால், தங்கள் நிறுவனத்தில் அரசியல் தலையீடு இருக்க கூடாது என்றும், நிறுவனத்தின் பெயரில் தொழிற்சங்கம் துவங்குவது அடிப்படை உரிமை அல்ல என்றும் தெரிவித்தார். தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் 100 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாகவும், தங்கள் நிறுவன பெயரை பயன்படுத்தாமல் தொழிற்சங்கத்தை தொடங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். எனவே இந்த வழக்கில் தங்களையும் இணைத்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்..
அப்போது தொழிலாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என் ஜிஆர் பிரசாத், தொழிற்சங்க சட்டத்தின் கீழ் சங்கத்தை பதிவு செய்வது அடிப்படை உரிமை என்றும் கொரியாவில் கூட சாம்சங் பெயரை பயன்படுத்தி தொழிற்சங்கம் உள்ளதாகவும் தெரிவித்தார். தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமை என்றும் இது போல் பல நிறுவனங்களின் பெயர்களில் தொழிற்சங்கங்கள் துவங்கப்பட்டுள்ளதாக வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்டு நீதிபதி சாம்சங் நிறுவன இடையீட்டு மனுவை ஏற்றுக்கொண்டு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 11 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.