நெகிழ வைத்த நீதிபதி ஆனந்த் வெங்கேடஷ் – சவுந்தர்! விஷச்சாராயத்தால் பெற்றோரை இழந்த 3 பேருக்கு உதவி
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பெற்றோரை இழந்து தவிக்கும் ஒரு மாணவி – 2 மாணவர்கள் என்று மொத்தம் 3 பேருக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த் வெங்கேடஷ் மற்றும் சவுந்தார் ஆகியோர் நேரில் உதவி செய்து நெகிழ வைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கடந்த ஜூன் மாதம் 18 ம்தேதி கள்ளச்சாராயம் (விஷச்சாராயம்) குடித்தனர். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு குறைந்த விலைக்கு விற்பனையான கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்ததில் 200க்கும் அதிகமானவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கபப்ட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கொத்து கொத்தாக அடுத்தடுத்து மக்கள் பலியாகினர். கள்ளச்சாராயம் குடித்து 230 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 68 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். மற்றவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர்.
இந்த சம்பவத்தில் கருணாபுரத்தை சேர்ந்த சுரேஷ் – வடிவுக்கரசி தம்பதி பலியாகி இருந்தனர். இதனால் அவர்களின் ஒரு மகள், 2 மகன்கள் பெற்றோர் இன்றி தவித்து வருகின்றனர். கள்ளச்சாராயம் அருந்தி பலியான சுரேஷ் – வடிவுக்கரசி தம்பதியின் மகள் பெயர் கோகிலா. மகன்களின் பெயர்கள் ஹரிஷ், ராகவன் ஆகும். இதில் கோகிலா பிளஸ் 1 படித்து வருகிறார். இந்நிலையில் தான் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆய்வு பணிக்காக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், சவுந்தர் ஆகியோர் சென்றனர்.
அப்போது பெற்றோரை இழந்து தவிக்கும் மாணவி கோகிலா, மாணவர்கள் ஹரிஷ், ராகவன் ஆகியோரை நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்படி நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், சவுந்தர் ஆகியோர் கூறினர். இதையடுத்து பள்ளியில் இருந்து அவர்கள் 3 பேரும் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். பள்ளி சீருடையில் அவர்கள் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு வந்தனர்.
இதையடுத்து அவர்கள் 3 பேருக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நீதிபதி சவுந்தர் ஆகியோர் ஆறுதல் கூறினர். மேலும் புத்தாடைகள், பள்ளி சென்று வர வசதியாக சைக்கிளும் வழங்கினர். இந்த வேளையில் நீதிபதிகள் ‛‛தற்போது நீங்கள் என்ன படித்து வருகிறீர்கள்? எதிர்கால குறிக்கோள் என்ன?’’ என்று கேள்வி கேட்டனர். அதற்கு கோகிலா, ‛‛தான் 11ம் வகுப்பு படித்து வருகிறேன். இன்ஸ்பெக்டராக வர விரும்புகிறேன்’’ என்றார்.
அதேபோல் ஹரிஷ் தான் ‛‛10ம் வகுப்பு படிக்கிறேன். அட்வகேட் ஆக விரும்புகிறேன்’’ என்றார். மேலும் ராகவன், ‛‛தான் 9ம் வகுப்பு படித்து வருகிறேன். படிப்பை முடித்துவிட்டு ஐடிஐ படிக்க இருக்கிறேன்’’ என்று தங்களின் ஆசைகளை நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், சவுந்தரிடம் தெரிவித்தனர். அதனை கேட்டு மகிழ்ச்சியடைந்த நீதிபதிகள் 3 பேருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், ‛‛நீங்கள் மனதளராமல் படிக்க வேண்டும்’’ என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.