படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானி.. கொண்டாடும் நீலகிரி மக்கள்!


நீலகிரியில் வாழும் படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானியாக கோத்தகிரியை சேர்ந்த படுகர் இன பெண் ஜெயஸ்ரீ தேர்வாகி உள்ளதை அந்த மாவட்ட மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர்.

படுகர் இன மக்கள் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற நகர பகுதிகளிலும், கிராமங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.

பொதுப்பிரிவு பட்டியலில் உள்ள இவர்கள் தங்களை பழங்குடியின பிரிவில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். கடந்த சில வருடங்களாக இந்த சமுதாயத்தை சேர்ந்த பலர் கப்பல் படை, ராணுவம் உள்பட பல்வேறு துறைகளில் சேர்ந்து பணியாற்றியும் வருகிறார்கள். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நெடுகுளா குருக்கத்தியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் மணி. இவருடைய மனைவி மீரா. இவர்களுக்கு ஜெயஸ்ரீ என்ற மகள் உள்ளார். இந்த ஜெயஸ்ரீதான் நீலகிரி படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானியாக தேர்வாகியுள்ளார்.

ஜெயஸ்ரீ பள்ளிப்படிப்பை கோத்தகிரியில் முடித்தார். இதன்பின்னர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் முடித்த இவர் சில காலம் ஐடி துறையில் வேலை பார்த்து வந்தார். அதன் பின்னர் விமானியாக முடிவு செய்து பைலட் பயிற்சி முடித்து தற்போது விமானியாக சேர்ந்துள்ளார்.

ஜெயஸ்ரீ கூறுகையில், “எங்களது சமுதாயத்தில் அண்டை மாவட்டம், மாநிலங்களுக்கே படிக்க அனுப்ப தயங்குவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மற்றொரு நாட்டுக்கு விமான பயிற்சி பெற தைரியமாக எனது பெற்றோர் என்னை அனுப்பி வைத்தார்கள்.

வழக்கமான வேலைகளைவிட விமான வேலையில் சவால்கள் அதிகம் உள்ளது. 3 அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறை உடல் பரிசோதனை, மனநல பரிசோதனைகள் செய்ய வேண்டும். அதில் தேர்வு பெறவில்லை என்றால் விமானியாக தொடர முடியாது. பணியை இழக்க வேண்டிய நிலை வரும்.

விமானியாக வர விரும்புவோருக்கு மன தைரியம் அதிகளவில் இருக்க வேண்டும். இப்படி ஒரு வேலைக்கு நான் வர காரணம் எனது ஆரம்ப கால பள்ளி படிப்பும், அங்கிருந்த ஆசிரியர்களும் முக்கிய காரணம் என்று கூறுவேன். எங்கள் சமுதாயத்திலும், நீலகிரி மாவட்டத்திலும் முதல் பெண் விமானியாக உருவாகி இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது”

தன்னம்பிக்கையும், கல்வியும், பெற்றோரின் அன்பான ஆதரவும் பெண்களுக்கு இருந்தால் அவர்கள் மிகப்பெரிய உயரத்தை அடைய முடியும் என்பதற்கு விமானி ஜெயஸ்ரீ மிகச்சிறந்த உதாரணமாவார்.
Share on: