மின்கட்டண உயர்வை தொடர்ந்து 100 யுனிட் இலவச மின்சாரத்தில் கை வைக்கும் திமுக அரசு!


தமிழ்நாட்டில் ஒரே வளாகத்தில் பல மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை ஒன்றாக இணைக்க மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஒரு இணைப்புக்கு மட்டும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.

அதிமுக ஆட்சியில் வீட்டு உபயோகிப்பாளர்கள் அனைவருக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு திமுகவும் இந்த திட்டத்தை தொடர்ந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்ட இந்த ஆண்டும் ஜூலை 1-ம் தேதி முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக அறிவிப்பு வெளியானது.

அதாவது தற்போது, 2.47 கோடி வீடு மற்றும் குடிசை மின்நுகர்வோரில் 1 கோடி நுகர்வோர்களுக்கு மின்கட்டண உயர்வு எதுவும் இல்லை. 0-400 யூனிட் மின் பயன்பாட்டுக்கான கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60 லிருந்து 20 காசுகள் அதிகரித்து ரூ.4.80 ஆக உயர்த்தப்பட்டது. 401-500 யூனிட்டுக்கான கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.6.15 என்பதில் இருந்து ரூ.6.45 ஆக அதிகரித்துள்ளது. 501 முதல் 600 யூனிட் மின் நுகர்வுக்கு ரூ.8.15 கட்டணம் பெறப்பட்ட நிலையில், இப்போது ரூ.8.55 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 601-800 யூனிட்டுகளுக்கு ரூ.9.20 ஆக இருந்த மின் கட்டணம் ரூ.9.65 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த மின் கட்டண உயர்வால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை மின்சார வாரியம் திட்டவட்டமாக மறுத்தது. 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது போன்ற செய்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் ஒருவரின் பெயரில் ஒரே வளாகத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை ஒன்றாக இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கணக்கெடுக்கும் பணிகளை தமிழ்நாடு மின்சார வாரியம் தொடங்கியுள்ளது. அதாவது ஒரு வீடு அல்லது வர்த்தக நிறுவனத்தில் இரு மின் இணைப்புகள் இருந்தால் அதை ஒரே மின் இணைப்பாக ஒருங்கிணைத்து அதில் ஒன்றில் மட்டும் 100 யூனிட் இலவசமாக கழித்து மின் கட்டணம் செய்யும் புதிய நடைமுறை சென்னையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் மின்வாரியம் அறிவித்த போதே ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை மெர்ஜ் செய்து, அதில் ஒரு இணைப்புக்கு மட்டும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்படுத்த இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வு ஆகியவை ஏற்கனவே மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ள நிலையில் தற்போது 100 யூனிட் இலவச மின்சார திட்டத்திலும் கட்டுப்பாடுகளை கொண்டுவந்து, வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Share on: