மின் கொள்முதலில் முறைகேடு? 26 ஆயிரம் கோடி இழப்பு? மூடி மறைக்கும் அரசு?


மின்சார வாரியத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கு மின் கட்டணம் காரணம் அல்ல என்றும் மின் கொள்முதல் கட்டணம் நிர்ணயித்த தொகையைவிட அதிகமாகச் செய்ததுதான் என்ற புதிய விளக்கத்தை மின் ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த காந்தி முன்வைத்துள்ளார்.

திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் மின்கட்டண உயர்வு ஷாக் அடிக்கிறது எனப் போராட்டம் நடத்திய அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தது முதல் முறையாக கிட்டத்தட்ட 30% அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தினார். அது மட்டுமல்ல, அடுக்ககங்களில் பயன்படுத்தப்படும் நீர் மோட்டார்களுக்கு தனி கட்டணம் என்ற புதிய டெக்னிக் ஒன்றையும் அறிவித்தார்.

கூடவே லிஃப்ட் உள்ள வீடுகள், 5 வீடுகளுக்கு மேல் உள்ள அடுக்ககங்கள் என வகைவகையாக பிரித்து புதிய மின்கட்டணத்தை அறிவித்தார். இந்தக் கட்டண உயர்வு பொது மக்களை மிகக் கடுமையாகப் பாதித்தது. அதனைத் தொடர்ந்து இப்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரை காத்திருந்துவிட்டு வெற்றி அறிவிப்பு வெளியான அடுத்த சில நாட்களில் மின் கட்டணத்தை அரசு உயர்த்தி இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்படப் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஆனால், தமிழ்நாடு அரசு கட்டண உயர்வு ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. மின்சாரம் பயன்படுத்தும் ஒருகோடி பயனாளிகளுக்கு எந்த வித கட்டண மாற்றமும் இல்லை என்றும் அதாவது 41.37% பேரை இது பாதிக்காது என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. 200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தக் கூடிய 63 லட்சம் பேருக்கு மாதம் 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் 300 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் மாதம் 15 ரூபாய்தான் இனி அதிகம் கட்ட வேண்டி வரும் என்றும் ஒரு சமாதானத்தை அரசு முன்வைத்துள்ளது.

அதுபோல 25 லட்சம் போர் 400 யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்தப் பிரிவினர் மாதம் 25 ரூபாய் கூடுதலாகச் செலுத்த வேண்டி இருக்கும் என்றும் 500 யூனிட் வரை மின் நுகர்வு செய்யும் சுமார் 13 லட்சம் பேர் இனி மாதம் 40 ரூபாய் கூடுதலாகக் கட்ட வேண்டி இருக்கும் என்று விளக்கம் அளித்துள்ள அரசு பிற மாநிலங்களை விடத் தமிழ்நாட்டில் மின் கட்டணம் குறைவு என்ற ஒரு கருத்தை முன்வைத்து வாதிட்டு வருகிறது. ஆனால், ஆட்சிக்கு வந்த 3 அண்டுகளில் 2 முறை மின் கட்டணத்தை உயர்த்தியது நியாயமே இல்லை என்கிறார் மின் ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த காந்தி. அவர் மின் வாரியத்தில் ஏற்படும் இழப்புக்குக் காரணமே வேறு என்று வாதிடுகிறார்.

இது பற்றி காந்தி கூறுகையில், “இந்த மின் கட்டண உயர்வைத் தமிழக அரசு நினைத்தால் தவிர்த்திருக்க முடியும்? இன்னும் சொல்லப்போனால் தவிர்த்திருக்க வேண்டும். இதற்கு முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டண உயர்வு கொண்டுவரப்பட்டது. அப்போது 40% அளவுக்குக் கட்டணத்தை உயர்த்தினார்கள். மின்சார வாரியம் இந்த ஆண்டுக்கான கணக்கு வழக்குகளை ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்திருக்கிறது.

அதாவது 2022 மற்றும் 23 ஆம் நிதியாண்டில் 7 மாதங்களில் மின்சார வாரியத்திற்கு வந்துள்ள வருமானம் 14,700 கோடி ரூபாய். இந்தளவுக்கு வருமான கிடைப்பதற்கு மின் கட்டணத்தை அதிக அளவு உயர்த்தியதுதான். இதற்கு முந்தைய 2021-22 ஆம் நிதியாண்டில் மின்சார வாரியத்தின் மொத்த வருவாய் இழப்பு 18 ஆயிரம் கோடியாக இருந்தது. அதில் 14 ஆயிரம் கோடிக்கு மேல் கூடுதல் வருமானம் வந்துவிட்டது. அப்படிப் பார்த்தால் இழப்பு தொகை என்பது 3 ஆயிரம் கோடி அளவுக்கு குறைந்துள்ளது.

ஆனால், கட்டண உயர்வு செய்யப்பட்ட பிறகும் 26 ஆயிரம் கோடி நஷ்டம் என்று ஒரு கணக்கைச் சொல்கிறது மின் வாரியம். இந்த நஷ்டத்தைத் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் உதய் மின் திட்டத்தின் ஒப்பந்தம். இப்போது 4.8% மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் மூலம் மட்டுமே மின் வாரிய இழப்பை ஈடு கட்ட முடியாது. ஆக, மின்சார வாரிய நஷ்டம் என்பது வேறு எங்கேயோ நடக்கிறது. அது முடிவில்லாமல் வளர்ந்து கொண்டே செல்கிறது.

மின்சார வாரியம் மிகமிக ஒழுங்கீனமாக இருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று தேவை இல்லை. அதைச் சரி செய்ய வேண்டிய ஒழுங்குமுறை ஆணையம் ஏனோ கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகிறது. இந்தக் கட்டண உயர்வு இத்துடன் முடிவுக்கு வரப்போவதில்லை. ஆண்டுக்கு ஆண்டு இனி வரும் காலங்களில் மின் கட்டணம் உயர இருக்கிறது.

தமிழ்நாடு அரசு 100 யூனிட் வரை மின்சாரத்தைப் பயன்படுத்தும் மக்கள் 89 லட்சம் என சொல்கிறது. ஆனால், இந்த 89 லட்சம் மக்கள் 2 மாதத்திற்கும் சேர்த்து 49 யூனிட் தான் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் வாழ்க்கைத் தரமே அப்படித்தான் உள்ளது. ஆக, இழப்பு என்பது மின் கட்டணத்தால் வரவில்லை. மின்சார கொள்முதலால்தான் இந்த 26 ஆயிரம் கோடி ஏற்பட்டுள்ளது.

சுமார் 33 ஆயிரம் கோடிக்குச் செய்திருக்க வேண்டிய மின்சார கொள்முதலை 43 ஆயிரம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உற்பத்தி செலவு 14 கோடி இருக்க வேண்டும். ஆனால் அது 21ஆயிரம் கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆக, இந்தக் கொள்முதல் உயர்வும் உற்பத்தி செலவும்தான் இந்த நஷ்டத்திற்குக் காரணம். இதை நான் சொல்லவில்லை. மின்வாரிய கணக்கே இதைத்தான் சொல்கிறது. இது சரிதானா என்பதை ஒழுங்குமுறை வாரியம் இன்னும் கணக்குப் பார்த்துச் சொல்லவில்லை. அது சொன்ன பிறகு உண்மை வெளிச்சத்திற்கு வரும்.

மின்சார வாரியத்தின் வணிகம் என்பது மின்சாரத்தை விலைக்கு வாங்கி விற்பது மட்டுமல்ல. இந்த வாரியத்திற்கு மிகப்பெரிய கட்டமைப்பு இருக்கிறது. 6 லட்சம் கிமீட்டருக்கு எல்.டி லைன் உள்ளது. 2 லட்சம் கி.மீட்டருக்கு ஹெச்.டி லைன் உள்ளது. 4 லட்சம் டிரான்ஸ்ஃபார்மர்கள் உள்ளன. 3.3 கோடி மின் இணைப்புகள் இருக்கின்றன. இந்தக் கட்டமைப்பைத் தனியார்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அதன் மூலம் ஒரு வணிகம் நடைபெறுகிறது.

ஒரே மின் பாதையில் ஆயிரத்திற்கும் அதிகமான தனியார் நிறுவனங்களின் மின்சாரம் பாய்ந்து வருகிறது. இந்தக் கணக்கை அரசு ஒழுங்குப்படுத்தவில்லை. அதில் வழங்கப்படும் சலுகைகளால்தான் மின்வாரியத்திற்கு இழப்பு வருகிறது. இதன் மூலம் 1500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைச் சரி செய்தால், கட்டண உயர்வு என்பது வந்திருக்காது” என்கிறார்.
Share on: