ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு…


பல்வேறு சேவைகளை ரேஷன் கடை ஊழியர்கள் செய்தாலும், அவர்கள் ஒரே துறையின் கீழ் இல்லாமல் நான்கு துறைகளின் கீழ் உள்ளார்கள். இதனால் துறை ரீதியாக பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாக கூறி வருகிறார்கள். இந்நிலையில் பொதுவினியோக திட்டத்திற்கு தனித்துறை ஏற்படுத்தக்கோரி ரேஷன் கடை ஊழியர்கள் வரும் நவம்பர் 7-ந்தேதி வேலை நிறுத்தம் மேற்கொள்ள உள்ளதாக தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கூறினார்.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் 34,790 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன . இவற்றில் 33,377 கடைகள் கூட்டுறவு துறை மூலம் நடத்தப்படுகிறது. இதில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு குறைவாக உள்ள முழு நேரக் கடைகள் 18,782 ஆகவும், பகுதி நேரக் கடைகள் 9,388 ஆகவும், ஆயிரம் முதல் ஆயிரத்து 500 குடும்ப அட்டைகள் கொண்ட முழு நேரக் கடைகள் 4,352 ஆகவும் செயல்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகளுக்கு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து அனைத்து மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு, தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, ஆயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தில் அரிசி, கோதுமை, சர்க்கரை, சிறப்பு பொது விநியோகத் திட்டத்தில் பருப்பு, பாமாயில் விநியோகம் செய்யப்படுகிறது. அரிசியும், கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. சர்க்கரை ரூ.25, பருப்பு ரூ.30, பாமாயில் ரூ.25-க்கு வழங்கப்படுகிறது. அரசின் திட்டம் மூலம் 2 கோடியே 23 லட்சத்து 74 ஆயிரத்து 842 ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுகிறார்கள். அதாவது சுமார் 7 கோடி மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

ரேஷன் கடைகள் என்பது தமிழ்நாட்டில் வங்கிகளைவிடவும் மக்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளன. மக்களுக்கு தேவையான பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம் உள்பட ரொக்கப்பணம் கூட ரேஷன் கடைகள் மூலமே விநியோகம் செய்யப்படுகிறது. ரேஷன் கடைகளில் புதிதாக வங்கி சேவையை ஆரம்பிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இப்படி பல்வேறு சேவைகளை ரேஷன் கடை ஊழியர்கள் செய்தாலும், அவர்கள் ஒரே துறையின் கீழ் இல்லாமல் நான்கு துறைகளின் கீழ் உள்ளார்கள். இதனால் எல்லாருக்குமே பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் பொதுவினியோக திட்டத்திற்கு தனித்துறை ஏற்படுத்தக்கோரி ரேஷன் கடை ஊழியர்கள் வரும் நவம்பர் 7-ந்தேதி வேலை நிறுத்தம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்கள்.

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழ்நாட்டில் பொது வினியோக திட்டம் 4 துறைகளின் நிர்வாகத்தில் இயங்கி வருகிறது. இதனால் பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறையையும் திருப்திபடுத்த வேண்டிய நிலையில் ரேஷன் கடை பணியாளர்கள் உள்ளனர். எனவே, பொது வினியோக திட்டத்துக்கு என தனித்துறை உருவாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 35 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 7-ந்தேதி மாநிலம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளையும் பூட்டி விட்டு, ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளோம். அன்று மாவட்ட தலைமையிடங்களில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம்” என்று கூறினார்.
Share on: