
சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் கடந்த 1973-ம் ஆண்டு பத்திர பதிவுத்துறையில் சார்-பதிவாளராக பணியில் சேர்ந்தார். இவர் கடந்த 1991ம் ஆண்டு முதல் 2000 வரை சென்னையில் மாவட்ட பதிவாளராக பணியாற்றினார். இந்த காலக்கட்டத்தில் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருந்தார் என புகார் எழுந்தது. இந்த வழக்கில் தற்போது 77 வயதாகும் முன்னாள் அரசு ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களை பொறுத்தவரை தங்கள் பணி காலத்தில் லஞ்சம் வாங்கினாலோ அல்லது வருமானத்திற்கு அதிமாக சொத்து சேர்த்தாலோ அப்போது அவர்கள் தண்டிகப்படவில்லை என்றாலும், அவர்களது இறுதி காலத்தில் தண்டிக்கப்படுவது அதிகமாக நடக்கிறது. எவ்வளவு சொத்து சேர்த்தாலும், அந்த சொத்துக்கள் நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்டு, அரசுடைமை ஆக்கப்படும்.
பல அரசு ஊழியர்கள் ஓய்வு காலத்தில் வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார்கள். அதில் பலர் தண்டனைகளையும் அனுபவித்து வருகிறார்கள். வயதான காலத்தில் சிறைச்சாலை தண்டனை அனுபவிக்கும் நிலை பல அரசு ஊழியருக்கு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு லஞ்சம் வாங்கி கொடைக்கானலில் 100 கோடி சொத்து சேர்த்தவருக்கு மறக்க முடியாத தண்டனை கிடைத்தது.
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தாத்தையங்கார் பேட்டை, பில்லாதுரை கிராமத்தைச் சேர்ந்த 79 வயதாகும் ஜானகிராமன், தமிழ்நாட்டில் சார்பதிவாளராக பணிபுரிந்தவர். இவர் சார்பதிவாளராக 90களில் பணிபுரிந்தார். இவருடன் சார் பதிவாளராக இருந்த 1989-1993 காலக்கட்டத்தில், திருச்சி மாவட்டம் துறையூர், உறையூர், முசிறி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய முக்கிய இடங்களில் சார்பதிவாளராக பொறுப்பு வகித்திருந்தார்.
இந்த காலக்கட்டத்தில் முன்னாள் சார் பதிவாளர் ஜானகி ராமன் அவரது வருமானத்திற்கு அதிகமாக சட்டவிரோதமான வகையில் இவரது பெயரிலும், இவரது மனைவி வசந்தி (வயது 65) பெயரிலும் வாங்கிக் குவித்த சொத்துக்களின் அப்போதைய மதிப்பு ரூ.32,25,532/- (ரூபாய் முப்பத்தி இரண்டு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து ஐநூற்றி முப்பத்தி இரண்டு மட்டும்) ஆகும். அதாவது வழக்கமான சொத்தை விட 98% ஆகும்.
இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததன்பேரில், கடந்த 17.08.2001 அன்று அப்போதைய திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவில் காவல் ஆய்வாளர் அம்பிகாபதி என்பவர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் புலன் விசாரணை நீண்ட காலமாக நடந்து வந்தது. அதன்பின்னர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணை நடந்தது. 20 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் முன்னாள் சார் பதிவாளர் ஜானகிராமன் மற்றும் அவரது மனைவி வசந்தி ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் வருமானத்திற்கு அதிகமாக குற்றவாளிகளால் சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுக்கு ஒப்படைக்குமாறும் நீதிபதி அப்போது தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.
இதன் படி முன்னாள் சார்பதிவாளர் ஜானகிராமன், அவரது பெயரிலும், அவரது மனைவி வசந்தி பெயரிலும் வில்பட்டி மற்றும் கொடைக்கானல் பகுதியில் வாங்கிய சொத்தின் தற்போதைய மதிப்பு மட்டும் சுமார் 100 கோடிக்கும் மேல் என்று தகவல்கள் அப்போது வெளியானது. திருச்சி நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பாணியிலே சென்னை சிறப்பு நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் பத்திர பதிவுத்துறை அதிகாரி, மனைவிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த 77 வயதாகும் சந்திரசேகரன், கடந்த 1973-ம் ஆண்டு பத்திர பதிவுத்துறையில் சார்-பதிவாளராக பணியில் சேர்ந்தார். கடந்த 1991-ம் ஆண்டு முதல் மத்திய சென்னை பதிவுத்துறை அலுவலகத்தில் மாவட்ட பதிவாளராக (தணிக்கை) பணியாற்றி வந்தார். கடந்த 1.1.1991 முதல் 31.12.2000 வரையிலான பணிக்காலத்தில் இவர், வருமானத்துக்கு அதிகமாக 20 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய்க்கு அவரது பெயரிலும், அவரது மனைவி லதா (65) பெயரிலும் சொத்து குவித்ததாக 2006-ம் ஆண்டு சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கணவன்-மனைவி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வருமானம், சந்திரசேகரின் வழக்கமான வருமானத்தை விட 250 சதவீதம் அதிகம் என லஞ்ச ஒழிப்புத்துறை அப்போது குற்றம்சாட்டியது.
இந்த வழக்கு விசாரணை சென்னை லஞ்ச ஒழிப்பு தடுப்புப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.பிரியா முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரியா, முன்னாள் சார் பதிவாளர் சந்திரசேகரன், அவரது மனைவி லதா ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவர்களுக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். வருமானத்துக்கு அதிகமாக இவர்கள் சேர்த்த சொத்துகளை அரசுடமையாக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இப்போதைய மதிப்பின் படி பார்த்தால், அந்த சொத்துக்கள் கோடிகளை தாண்டும் என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.