விஏஓ முதல் தாசில்தார் வரை.. லஞ்சத்தை சட்டம் ஆக்கிடுங்க.. திருநெல்வேலியில் இளைஞர் வெளியிட்ட வீடியோ


கூட்டு பட்டாவில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தேன், அதற்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுகிறாங்க.. எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேக்குறாங்க.. தயவு செய்து லஞ்சத்தை சட்டம் ஆக்கி விடுங்கள் என்று வருவாய்த்துறைக்கு எதிராக திருநெல்வேலியைச் சேர்ந்த கண்னன் என்பவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

பட்டா வாங்கும் விவகாரத்தில் விஏஓ முதல் நில அளவையார், தாசில்தார் வரை யாருமே லஞ்சம் கேட்கக்கூடாது என்று அரசு கடுமையாக உத்தரவிட்டுள்ளது. மேலும் பட்டா பெயர் மாறுதல், பத்திரப்பதிவு முறை போன்றவற்றில் பல்வேறு விஷயங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளன. விரைவில் ஒரு நிமிடத்தில் பட்டா வழங்கும் அளவிற்கு நிலைமை வரப்போகிறது.

பல லட்சம் கடன் வாங்கி நிலம் அல்லது வீடு வாங்குவோர் பத்திரம் முடிக்கவும், பட்டா வாங்கவும் கையூட்டு கொடுக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்க அரசு இது வரை ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.ஆனாலும் ஒரு சில இடங்களில் விஏஓக்கள், நகராட்சி ஊழியர்கள், தாசில்தார்கள் லஞ்சம் கேட்பதாக புகார்கள் உள்ளது. வருவாய் துறையில் பணியாற்றும் சில ஊழியர்கள் லஞ்சம் கொடுத்தால் தான் பணிகளை முடித்து தருவாகவும் குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் கண்ணநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஒருவர் கண்ணன் என்பவர் வருவாய்த்துறை அதிகாரிகள் கூட்டு பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் கேட்பதாகவும், அதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில் கண்ணன் கூறுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே, வருவாய்த்துறை என்ற துறை இருக்கிறது. வருவாய்த்துறை ஆபிஸ்களில் காலை வைத்தாலே லஞ்சம் கேட்குறாங்க. லஞ்சம், லஞ்சம், எதற்கெடுத்தாலும் லஞ்சம் தலை விரித்தாடுகிறது. நான் கூட்டு பட்டாவில் பெயர் சேர்க்க விண்ணப்பித்து இருந்தேன்.. அதற்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார்கள். அதற்கு எல்லா ஆவணங்களும் சரியாக இருப்பதால் நான் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று உறுதியாக கூறினேன்.

இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும், அந்த புகார் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. கடனை வாங்கி நான் இடத்தை வாங்கினால், இவர்களுக்கு லஞ்சம் கொடுத்து தாழ முடியாத நிலை இருக்கிறது. முதல்வர் அவர்களே, தயவு செய்து லஞ்சத்தை சட்டம் ஆக்கி விடுங்கள், இல்லாவிட்டால் லஞ்சம் கேட்பவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்” என வீடியோவில் கண்ணன் கூறினார்.

கண்ணன் என்பவரின் இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள சேரன்மகாதேவி உதவி ஆட்சியர், இந்த புகார் தொடர்பாக இரு தரப்பினரிடைய விசாரணை நடந்து வருகிறது. வழக்கு விசாரணையின் இறுதி ஆணையின் படியே பட்டா மாறுதல் வழங்க முடியும் என தெரிவித்துள்ளார்.
Share on: