விஜய் பேச்சால் அதிமுகவுக்குதான் உண்மையான ஆபத்து.. அப்போ எடப்பாடி!


விஜய் திமுக, பாஜகவையும் எதிர்ப்பதாக சொல்லியிருப்பதனால் அதிமுகவுக்கு ஆபத்து இல்லை என்று நினைக்க வேண்டாம். விஜய் பேச்சால் அதிமுகவுக்கு தான் உண்மையான ஆபத்து என்று முன்னாள் அமைச்சர் கேசி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், ஒன்றுபட்ட அதிமுக ஒன்றே இதற்கு தீர்வு என்றும், அதை நோக்கி பயணிப்பாரா எடப்பாடி பழனிசாமி என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் விஜய் பேசியது தமிழக அரசியலில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. திமுக, பாஜகவை நேரடியாக விமர்சித்து பேசிய விஜய், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்க கூடிய அதிமுகவை பற்றி ஒருவார்த்தை கூட சொல்லவில்லை. சொல்லப்போனால், மறைமுகமாக கூட தாக்கி பேசவில்லை.

வரும் காலத்தில், அரசியல் கள சூழல் மாறினால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க கூடிய நிலை கூட வரலாம் என்பதால் விஜய், அதிமுக குறித்து பேசுவதை தவிர்த்து இருக்கலாம் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. இத்தகைய சூழலில், அதிமுக எம்பியாக இருந்தவரும் தற்போது அதிமுக ஒருங்கிணைப்பு குழுவில் செயல்பட்டு வருபவருமான கேசி பழனிசாமி. விஜய்யால் அதிமுகவிற்கு தான் அதிக ஆபத்து என சொல்லியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

விஜயின் நேற்றைய மாநாட்டு செய்தி வெளிப்படையாக பாஜக சித்தாந்தத்தையும், திமுகவின் ஊழலையும் எதிர்ப்பதாக இருந்தாலும். இந்த 2 கட்சிகளையும் விட அதிமுகவுக்கு தான் அதிகமான ஆபத்து சூழ்ந்துள்ளது என்பதை உணர வேண்டும்.

* எடப்பாடி பழனிசாமி தனது காலத்தோடு அதிமுகவுக்கு முடிவுரை எழுதுகிறாரா? என்கிற அச்சம் அனைத்து அதிமுக தொண்டர்களுக்கும் ஏற்படுத்துகிறது. பாஜகவை எதிர்த்து சிறுபான்மையினர் வாக்குகளை கவர நினைத்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் விஜயின் நேற்றைய பேச்சுக்கள் அதிமுகவுக்கு வருகிற திமுக எதிர்ப்பு வாக்குகளையும் பாஜக எதிர்ப்பு சிறுபான்மையினர் வாக்குகளையும் குறிவைப்பதாகவே அமைந்தது.

* நேற்று விஜய் சொன்ன “வலுவான தலைமை இல்லாமல் ஒரு சின்ன பையன் தலைமையில் போரை சந்தித்த பாண்டிய வம்சத்தின் “கதையின் அர்த்தம் திமுகவையும் பாஜகவையும் ஒருசேர எதிர்த்து நின்று வெல்லுகிற ஆற்றல் இன்றைய அதிமுக தலைமைக்கு இல்லை என்பதைத் தான் அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார். அந்த இடத்தை தான் நிரப்பப் போவதாக சூளுரைத்திருக்கிறார். இதையே தான் ஜெயலலிதா அம்மா மறைவுக்கு பிறகு வெற்றிடம் உள்ளது என்று எல்லோரும் தெரிவித்தார்கள்.

* அப்பொழுது EPS அந்த வெற்றிடத்தை நிரப்பிவிடுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள் ஆனால் நேற்றைய விஜய்யின் பேச்சு EPS-ம் அந்த வெற்றிடத்தை நிரப்பவில்லை, அது இன்றும் வெற்றிடமாக தான் உள்ளது அந்த இடத்தை நிரப்ப தான் களத்திற்கு வந்திருப்பதாக விஜய் பேசியிருக்கிறார்.

* கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கு என்று தெரிவித்திருக்கிறார், 50 ஆண்டுகால அரசியலில் 30 ஆண்டுகாலம் தமிழகத்தை ஆண்ட அதிமுக விஜய் தலைமையில் ஆட்சி அமைய கூட்டணி கட்சியாக விஜயோடு இணைய முடியுமா? அல்லது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய விஜய் முன்வருவாரா?

* இதுவரைக்கும் எடப்பாடி பழனிசாமி தனித்து நின்று ஆட்சியை பிடிப்போம் என்று சொல்லவில்லை. அவர் சொன்னதெல்லாம் பலமான, வலிமையான, மெகா கூட்டணியை அமைப்போம் என்று கூட்டணியை தான் நம்பி இருந்தார். ஆனால் விஜயின் நேற்றைய பேச்சின் மூலம் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருவேளை அணிமாற நினைத்தால் விஜயை நோக்கித்தான் செல்வார்களே தவிர எடப்பாடியை நாடி வர வாய்ப்புகள் மிகவும் குறைவு. இதில் எப்படி அவர் வலிமையான கூட்டணியை அமைக்க போகிறார். அல்லது இதற்கு மாற்றாக என்ன திட்டம் வைத்திருக்கிறார் EPS?

* EPS தரப்பிலிருந்து பலர் ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் போன்று ஒரு கூட்டணியை ஏற்படுத்தலாம் என்கிற கருத்தை தெரிவிக்கிறார்கள். ஆனால் ஆந்திர அரசியல் வேறு தமிழக அரசியல் வேறு. சந்திரபாபு நாயுடு இதற்கு முன்பு அவர் தலைமையில் களம் கண்டு வென்று ஆட்சி அமைத்திருக்கிறார். வெற்றி தோல்வி என இரண்டையும் சந்தித்திருக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி இதுவரை வெற்றியே காணாத தலைவராக வரலாறு படைத்துக்கொண்டிருக்கிறார்.

* அதையும் தாண்டி ஒருவேளை அதிமுக-தவெக கூட்டணி அமைந்தாலும் கூட அது ஒட்டுமொத்த அதிமுகவை விஜய்க்கு தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு அதற்கு பிரதிபலனாக சில காலம் EPS முதலமைச்சர் பதவியை அனுபவித்து அவரும் அவரோடு இருக்கிற முன்னாள் அமைச்சர்கள் தங்களை மேலும் வளப்படுத்திக்கொள்ளலாமே ஒழிய அதிமுக அதில் பலப்படாது மாறாக பலவீனம் தான் அடையும், மேலும் தன் தனித்துவத்தை இழக்கும்.

* விஜய் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் எனக் கூறும்பொழுது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரையும், என்.டி.ஆரையும் குறிப்பிட்டு சொல்லுகிறார், அவர்களை போற்றுகிறார்.ஆனால் ஜெயலலிதா அம்மாவை பற்றி எந்த ஒரு கருத்தும் அவர் குறிப்பிடவில்லை. அப்படியென்றால் எம்.ஜி.ஆர் காலத்து அதிமுக முன்னணியினரையும், தொண்டர்களையும், வாக்குவங்கியையும் அவர் கவர நினைக்கிறார். அம்மா காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்களை ஊழல்வாதிகளாகவே அவர் சித்தரிக்கிறார்.

* தமிழகத்தை மாற்று அரசியல் களத்திற்கு தயார்படுத்த முயல்கிறார். வெற்றியோ தோல்வியோ திமுக இதை எதிர்கொள்ளும், ஆனால் இரண்டும்கெட்டான் நிலையில் அதிமுக பயணிக்க கூடாது. வலுவான தடுப்பு ஆட்டத்தை, தன் பலத்தை உயர்த்திக்கொள்கிற யுக்தியை, இழப்புகள் ஏற்படாமல் தடுக்கிற செயல்களை செய்ய முன்வருவாரா எடப்பாடி பழனிசாமி? ஒன்றுபட்ட அதிமுக ஒன்றே இதற்கு தீர்வாகும். அதை நோக்கி பயணிப்பாரா எடப்பாடி பழனிசாமி? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Share on: