2026-ல் திமுக vs பாஜக-அதிமுகவை அகற்ற சதி- சென்னை பவள விழா மாநாட்டில் அம்பலம்..கேசி பழனிசாமி வார்னிங்!
2026 தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் இருந்து அதிமுகவை அகற்ற திமுகவும் பாஜகவும் இணைந்து சதி செய்து வருவதையே சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக பவள விழா மாநாடு அம்பலப்படுத்தி இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பு குழு முன்னாள் எம்பி கேசி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார். அதிமுக ஒன்றுபடாமல் போனால் 2026 தேர்தலில் திமுக vs பாஜக என்ற நிலைமைதான் உருவாகும் எனவும் கேசி பழனிசாமி எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கமான எக்ஸ்-ல் கேசி பழனிசாமி பதிவிட்டுள்ளதாவது: நேற்று திமுகவின் பவள விழா நடைபெற்றது, பொதுவாக திமுக மாநாடுகளில் அதிமுகவுக்கு எதிரான தீர்மானங்களும், அறிவிப்புகளும், நிலைப்பாடுகளும் வெளிப்படும். அதேபோல் அதிமுக மாநாடுகளில் திமுகவிற்கு எதிரான நிலைப்பாடுகள் வெளிப்படும், ஆனால் நேற்றைய திமுக மாநாட்டில் முழுக்க முழுக்க மத்திய அரசாங்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான கருத்துக்கள் மட்டுமே வெளிப்பட்டது.
“Cool Lip” போன்ற போதை பொருட்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வரை அதிகம் புழங்கிக்கொண்டிருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான கருத்துக்களை தெரிவித்திருக்கிறது.
அதேபோல் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக 850 போலீஸ் அதிகாரிகள் உள்ளனர் என்று உளவுத்துறை பட்டியல் தயரித்துள்ளது. இதன் உண்மைத்தன்மை என்ன?
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை 10 லட்சம் கோடி முதலீடு ஈர்த்துள்ளது என்று விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் உண்மையாக எவ்வளவு முதலீடுகள் இதுவரை வந்தடைந்துள்ளது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” என்பார்கள் அதுபோல அந்த 10 லட்சம் கோடி ஏட்டில் மட்டும் உள்ளதா நாட்டுக்குள்ள வந்துவிட்டதா என்பது தெரியவில்லை.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திமுக ஆட்சியில் தமிழக அரசாங்கத்தின் கடன் சுமார் 2 லட்சம் கோடி உயர்ந்துள்ளது மற்றும் டாஸ்மாக் வருமானம் கிட்டத்தட்ட சுமார் 2 மடங்கு உயர்ந்துள்ளது.
விடியல் ஆட்சியில் அதிகாலை விடிந்தவுடன் பால் பாக்கெட் கிடைக்கிறதோ இல்லையோ, தமிழகம் முழுவதும் மதுபானம் தாராளமாக கிடைக்கிறது.
இவைகளை மறைத்து உணர்ச்சிவையப்படக் கூடிய சித்தாந்த அரசியல் மூலமாக மீண்டும் ஆட்சியை பிடிக்க திமுக முயற்சி செய்கிறது. அதேபோல மத்திய பாஜக அரசாங்கமும் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. அதிமுகவை அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்துகிற பணியை பாஜகவும் திமுகவும் ஒருங்கிணைந்து செயல்படுத்துகிறார்கள்.
அதிமுக தொண்டர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பயணிக்கிற அணி வழக்குகளுக்காக திமுகவிடம் அடைக்கலம் தேடியுள்ளதாலும், ஓ.பி.எஸ், சசிகலா, தினகரன் போன்றோர் பாஜகவிடம் அடைக்கலம் தேடியிருக்கிற காரணத்தாலோ சட்டமன்ற எதிர்க்கட்சியான அதிமுகவை புறக்கணித்து தாங்கள் மட்டுமே திராவிட கட்சி, திராவிட சித்தாந்தங்கள் தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று பறைசாற்றுகிறவகையில் இந்துத்துவா, திராவிட அரசியலை முன்னெடுத்துள்ளது. இது அதிமுகவுக்கு மிகவும் ஆபத்தானது.
அதிமுக தொண்டர்கள் அனைத்து மட்டங்களிலும் இதை உணர்ந்து வலிமையான ஒன்றுபட்ட_அதிமுக -வை கட்டமைத்து ஒரு திராவிட சக்தியாக அதிமுகவை நிலைநிறுத்த வேண்டும். வெறும் அறிக்கை அரசியலை மட்டுமே நம்பியியிருக்க கூடாது. இதை செய்ய தவறினால் 2026 தேர்தல் களம் திமுக VS பாஜக என்பதாக அமைந்துவிடும். இவ்வாறு கேசி பழனிசாமி எச்சரித்துள்ளார்.