61-வது முறையாக திறக்கப்படாத மேட்டூர் அணை! கலக்கத்தில் காவிரி டெல்டா விவசாயிகள்!


காவிரி நதிநீரில் தமிழ்நாட்டுக்கான உரிய பங்கை கர்நாடகா திறந்துவிடாமல் துரோகம் செய்வதால் மேட்டூர் அணை வறண்டு போய் கிடக்கிறது. காவிரி டெல்டா பாசனத்துக்காக ஆண்டு தோறும் ஜூன் 12-ந் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை இன்று திறக்கப்படாததால் விவசாயிகள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.

கர்நாடகா அணைகளில் இருந்து திறந்துவிடப்படுகிற காவிரி நீர் மேட்டூர் அணையில் தேக்கப்பட்டு பாசனத்துக்கு திறந்துவிடப்படும். மேட்டூர் அணையின் மொத்த நீர் தேக்க உயரம் 120 அடி. மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக இருந்தால் பண்ணவாடி நந்தி சிலை உள்ளிட்டவை வெளியே தெரியும்.

பொதுவாக காவிரி டெல்டா மாவட்ட விவசாயத்துக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ல் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் மேட்டூர் அணையில் நீர் இருப்பு போதுமான அளவு தற்போது இல்லை. இதனால் இந்த ஆண்டு காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை வழக்கமான ஜூன் 12-ல் திறக்கப்படவில்லை.

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 43.71 அடியில் இருந்து 43.51 அடியாக சரிந்தும்விட்டது. மேட்டூர் அணைக்கான நீர் வரத்தும் 404 கன அடியாக மட்டுமே இருக்கிறது. அணையின் நீர் இருப்பு வெறும் 14 டிஎம்சி நீர்தான்.

கர்நாடகாவின் துரோகத்தால் மேட்டூர் அணை கட்டப்பட்டதில் இருந்து 61-வது முறையாக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. இதனால் காவிரி டெல்டாவின் 12 மாவட்டங்களின் 16.40 லட்சம் ஹெக்டேர் நிலத்தின் பாசனமும் கேள்விக்குறியாகி நிற்கிறது..

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி முதல் ஜனவரி 28-ந் தேதி வரை 230 நாட்களுக்கு காவிரி நீர் திறப்பது வழக்கமான நடைமுறை. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடியை தாண்டியதாக இருந்தால் 230 நாட்களுக்கும் தொடர்ந்து காவிரி டெல்டா பாசனத்துக்கஆன நீரைத் திறந்துவிட முடியும். தற்போதைய நிலையில் 1 டிஎம்சி நீரை திறந்துவிட்டாலே கூட 90 நாட்களுக்குதான் காவிரி டெல்டா பாசனத்துக்கு தேவையான நீர் கிடைக்கும். இதனால் இன்று மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.
Share on: