எம்.ஜி.ஆர். கற்ற அரசியல் பாடம் இன்று வரை அதிமுகவை வழிநடத்துகிறது

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.ஐ திமுகவில் இருந்து நீக்க எண்ணற்ற முயற்சிகள் கருணாநிதியால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவருக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு கருணாநிதியை தயங்க செய்தது. அதற்காக அவர் கையில் எடுத்த ஆயுதம் பொதுக்குழு. தனக்கு வேண்டியவர்களை மட்டுமே கொண்ட அப்பொதுக்குழு உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து எம்.ஜி.ஆர்.ஐ கட்சியில் இருந்து நீக்கியது திமுக. 
     இப்படியொரு நிலை, தான் தோற்றுவித்த கழகத்திற்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும், யாரும் பொதுக்குழுவை கருவியாக பயன்படுத்தி கழகத்தை கைப்பற்றி விடக்கூடாது என்பதற்காகவும் எம்.ஜி.ஆர். அவர்கள் அதிமுகவை தொடங்கும்போதே பொதுக்குழுவிற்கு சிலவற்றை தவிர எந்த அதிகாரத்தையும் வழங்கவில்லை. அந்த சிலவும் கொள்கை ரீதியிலான அதிகாரங்களே. குறிப்பாக யாரையும் நீக்கவோ கட்சியின் தலைமையை தேர்ந்தெடுக்கவோ எந்த அதிகாரமும் பொதுக்குழுவிற்கு வழங்கப்படவில்லை.
     பிறகு யார்தான் தலைமையை தீர்மானிப்பர் என்ற கேள்விக்கு, கட்சியிலுள்ள 80 சதவிகித தொண்டர்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அவரே தலைமையை நிர்வகிப்பார் என்ற ஆகச்சிறந்த முடிவுகளை எடுத்தார். இந்தியாவிலுள்ள எந்தவொரு அரசியல் இயக்கத்திலும் இல்லாத தனித்துவம் அதிமுகவிற்கு இருக்கிறது என்றால், அது எம்.ஜி.ஆர். அவர்களால் கொண்டுவந்த இந்த தீர்மானமே ஆகும். அதுவே ஜனநாயகமாகும்.
    இப்போது OPS மற்றும் EPS க்கு இடையே நிலவும் மோதல்போக்கிற்கும் அதிமுக உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலைக்கும் அன்றே விடை சொன்னவர் எம்.ஜி.ஆர். ஆனால் அவ்வாறு நடந்தால் தனது பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் அதிமுகவின் விதிகளை மாற்றி, தனக்கு வேண்டியவர்களை மட்டும் பொதுக்குழு உறுப்பினர்களாக நியமித்து, தன்னைத்தானே பொதுச்செயலாளர் என்று அறிவித்துக்கொண்டார் EPS. இது ஜனநாயகமா? 
    நீதிமன்றங்களின் மூலம் அரசியல் மோசடி செய்து கொண்டிருக்கிறார் EPS. நீதிமன்றங்களையும் தேர்தல் ஆணையத்தையும் புறக்கணித்துவிட்டு, நமக்கான தலைமையை நாம் வாக்களித்து தேர்ந்தெடுப்போம். நூறு உறுப்பினர்கள் கொண்ட ஒரு லட்சம் கிளைகளை உருவாக்கி, குறைந்தது ஒரு கோடி தொண்டர்களிடம் உறுப்பினர் அட்டையை கொடுத்து வாக்குகளை சேகரித்து, தலைமையை நியமிக்க வேண்டும். எவர் வேண்டுமானாலும் போட்டியிடட்டும். ஆனால் தொண்டர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.
    இதற்கான முன்னெடுப்பை இன்றிலிருந்து துவக்க வேண்டும். நாம் ஒவ்வொரு கிளையிலும் குறைந்தது நூறு பேரையாவது திரட்டி  ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்குவோம். எம்.ஜி.ஆர். அவர்கள் விட்டுச்சென்ற பாதையையும் பணிகளையும் நாம்தான் மீட்டு செயல்படுத்த வேண்டும். ஒன்றிணைவோம்.

கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: