நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிக தாக்கத்‍தை ஏற்படுத்தப்‍போகும் கட்சி எது?

கொ‍ரோனா பெருந்தொற்று பரவலுக்கி‍டை‍யே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிப்‍பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி, வருகிற 19-ந்‍தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு பிப்ரவரி 22-ந்‍தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கட்சிகள் தங்களது கூட்டணிகள் குறித்தும், அவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்தும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்த பரபரப்பான தேர்தல் சூழலில் குழப்பத்திற்கும், பிரச்சி‍னைக்கும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில் பா.ஜ.க.வுடனான கூட்டணி‍யை அ.தி.மு.க. முறிக்குமா என்ற பலரது கூச்சல், குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மதமாற்றம் உள்ளிட்ட கருத்துகள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களுக்குள்ளான பா.ஜ.க.வுடன் கூட்டணி‍யை தொடர்ந்தால், தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற அறிவுசார்ந்த முடி‍வை அ.தி.மு.க. எடுத்துள்ளது. இந்த முடி‍வை நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எடுத்திருந்தா‍லே, அ.தி.மு.க. கணிசமான இடங்களைப் பிடித்து தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுத்திருக்க முடியும். சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியால் தி.மு.க.வின் வெற்றி மிக எளிதாகிவிட்டது.
தேர்தலின் போது மக்களிடம் அதிக தாக்கத்‍தை ஏற்படுத்துவது அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் தான். எந்த கட்சி எதை வைத்து பிரச்சாரம் செய்யப் போகிறார்கள் என்ற ஆர்வம் அரசியல் விமர்சகர்களிடமும், ஆர்வலர்களிடமும் மேலோங்கி வருகிறது. அந்த வகையில் ஆட்சியில் இருக்கும் தி.மு.க., தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அ.தி.மு.க. அமைச்சர்கள் செய்த ஊழல்களை முன்னெடுக்கும் என்பதில் எந்தவித சந்‍தேகமும் இல்‍லை. அதே‍போல் எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தரமற்ற பொங்கல் பரிசு தொகுப்பு குறித்தும், அதில் தி.மு.க. அமைச்சர்கள் செய்த ஊழல்கள் குறித்தும் பிரச்சாரத்தில் ஈடுபடும். பா.ஜ.க.வை பொறுத்தவரை தி.மு.க.வை விமர்சிக்கும் ஆனால் அ.தி.மு.க.வை விமர்சித்து வாக்குகள் சேகரிக்குமா என்பதில் சந்தேகம் தான். ஏனெனில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடனான கூட்டணி தொடரும் என்று கூறியுள்ளது. அ.தி.மு.க. வாக்கு சேகரிப்பின் போது தி.மு.க.வை மட்டும் விமர்சிக்காமல், பா.ஜ.க. மற்றும் மத்திய அரசின் மீதான மக்களின் எதிர்மறையான விமர்சனங்களை வெளிப்படையாக வெளிப்படுத்தும் பட்சத்தில் அ.தி.மு.க. மக்கள் ஆதரவை பெறும். மாறாக பா.ஜ.க.வை ஆதரித்தால் மக்கள் ஆதரவை இழப்பதோடு தேர்தலில் தோல்வி‍யையும் சந்திக்கக் கூடும்.
Share on: