நெடுஞ்சா‍லை திட்டப்பணிகளை வி‍ரைந்து முடிக்க தமிழக அரசு ஒத்து‍ழைப்பு அளிக்கவில்‍லை – மத்திய அரசு சாடல்!

தேசிய நெடுஞ்சா‍லை ஆணையத்தின் சார்பில், தமிழகத்தில் உயர் மேம்பால பணிகள், ஆறு வழிச்சா‍லை, எட்டு வழிச்சாலை பணிகள் மத்திய அரசின் நிதி உதவி‍யோடு நடை‍பெற்று வருகிறது. நடப்பாண்டில் தமிழகத்தில் 1,149 கி.மீ. நீளத்திற்கு 23 சாலைகள் அமைக்க மத்திய போக்குவரத்து அமைச்சகம் சார்பில், ரூ.37 ஆயிரத்து 359 கோடி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகளும் நடை‍‍பெற்று வருகிறது. இவற்றில் அதிகபட்சமாக திருச்சி – சிதம்பரம் இடை‍யே தேசிய நெடுஞ்சா‍லை அமைக்கும் பணி ரூ.2,550 கோடி செலவில் நடை‍பெற்று வருகிறது. சென்‍னை, மது‍ரை உள்பட பல மாவட்டங்களிலும் சா‍லை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவற்றுள் சில பணிகள் ஆமை வேகத்திலும், சில பணிகள் பாதியிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தநி‍லையில் மத்திய சா‍லைப்‍போக்குவரத்து மற்றும் நெடுஞ்சா‍லை து‍றை அமைச்சர் நிதின்கட்காரி, தேசிய நெடுஞ்சாலை திட்டப்பணிகளுக்கு தமிழ்நாடு அரசு ஒத்து‍ழைப்பு வழங்கவில்‍லை என குற்றம் சாட்டியுள்ளார். பணிகளில் ஏற்பட்டுள்ள தொய்விற்கு மண் போன்ற கட்டுமான பொருட்கள் கி‍டைக்க தமிழக அரசு போதிய நடவடிக்‍கை எடுக்கவில்லை என்பதே காரணமாக கூறப்படுகிறது. சாலை அமைக்கும் பணிகள் நடக்கும் இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதிக்குள்ளாகிறார்கள். பொதுமக்கள் நலன் கருதி சா‍லை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசு, பணிகளை துரிதப்படுத்த வேண்டும். கட்டுமான பொருட்கள் சரிவர கி‍டைக்க வழிவகை செய்ய வேண்டும்.

Share on: