அதிகரிக்கும் நாய் கடி சம்பவங்கள்! நாய்களை பிடிக்க கூடாது என மிரட்டல்! சென்னை ஐகோர்ட்டில் பரபர வழக்கு.
சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள மெட்ரோ சோன் அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்தக் கோரிய விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என சென்ன மாநகராட்சி, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சமீப காலங்களாகத் தெரு நாய்கள் குழந்தைகளைத் துரத்திக் கடிக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது. குறிப்பாக சென்னையில் நாய்க் கடி சம்பவங்கள் மிகப் பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது.
வீதியில் நடந்து செல்வோரை கூட நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இதற்கிடையே சென்னை கோயம்பேட்டில் கட்டப்பட்டுள்ள ‘மெட்ரோ சோன்’ என்ற மிகப் பெரிய குடியிருப்பு பகுதியில் 50க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இரவு பகல் பாராமல் சுற்றித் திரிந்து அங்குச் செல்பவர்களை விரட்டி கடிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த தெரு நாய்களை அப்புறப்படுத்தக்கோரி அந்த குடியிருப்பில் வசிக்கும் ஷபீனா பாத்திமா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தடுப்பூசி போடப்படாத இந்த நாய்களைப் பிடித்துச் செல்ல மாநகராட்சி ஊழியர்கள் வந்தாலும் சமூக ஆர்வலர் எனக் கூறிக் கொள்ளும் சிலர், நாய்களைக் கொண்டு செல்ல ஊழியர்களைத் தடுப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், நாய்களைத் துன்புறுத்துவதாகக் கூறி ப்ளு க்ராஸ் அமைப்பு மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என மாநகராட்சி ஊழியர்களை அவர்கள் மிரட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாகச் சென்னை மாநகராட்சிக்குக் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. சென்னை மாநகராட்சி தரப்பில், மனுதாரரின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை 8 வாரங்களுக்குத் தள்ளி வைத்தனர்.