
எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுக, முதல் முதலாக லோக்சபா தேர்தலை சந்தித்த 1977 முதல் 2024 வரை சந்தித்த தேர்தல்களில் எத்தனை வாக்கு சதவீதம் வாங்கியது என்பது பற்றியும், வரலாற்றிலேயே குறைந்த வாக்கு சதவீதம் எப்போது வாங்கியது என்பது பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்.
எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுக, அவரது தலைமையில் 1977ம் ஆண்டு சந்தித்த முதல் லோக்சபா தேர்தலில், 30.04% வாக்குகள் பெற்றதுடன் 17 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் அடுத்து நடந்த 1980 தேர்தலில் 25.38 சதவீதம் வாக்குகள் பெற்று 2 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. 1984ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக 12 இடங்களில் வென்று 18.36 சதவீதம் வாக்குகளை பெற்றது.
எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் 1989ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் 17.2 சதவீதம் வாக்குகளை பெற்று 11 இடங்களில் வெற்றி பெற்றது.அதிமுக குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற காரணமும் இருக்கிறது.. ஜெயலலிதா முதல்வரான 1991 தேர்தல் வரை அதிமுக குறைவான இடங்களிலேயே காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்டு வந்தது. அதன் பின்பு மெல்லமெல்ல அதிமுக போட்டியிடும் தொகுதிகள் அதிகரித்த காரணத்தால் வாக்குசதவீதம் கூடியது. 1991ல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 18.1 சதவீதம் வாக்குகளுடன் 11 இடங்களில் வென்றது..
ஆனால் 1996ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் வெறும் 7.84% வாக்குகள் மட்டுமே பெற்றதுடன் ஒரு இடத்தில் கூட வெல்லாமல் படுதோல்வி அடைந்தது. இதுவே 1977ம் ஆண்டு தொடங்கி 2024 வரையிலான அதிமுக வரலாற்றில் பெற்ற குறைந்தபட்ச வாக்குசதவீதம் ஆகும்.
1998-ல் முதன்முறையாக பாஜக உடன் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணி வைத்து தேர்தலில் வென்றது. அப்போது 18 இடங்களில் வென்றதுடன், 25.89 சதவீதம் வாக்குகளை அதிமுக பெற்றது. மத்திய அமைச்சரவையில் முதன்முறையாக அதிமுக பங்கெடுத்தது. ஆனால் ஓராண்டில் பாஜக ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்துவிட்டார்.. அதன்பின்பு 1999ம் ஆண்டு நடந்த தேர்தலில் 10 இடங்களில் வென்ற அதிமுக 25.68 சதவீதம் வாக்குகளை பெற்றது. 2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.. அதிமுக 2004ல் பெற்ற வாக்கு சதவீதம் 29.77 சதவீதம் வாக்குகளை பெற்றது.
2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 22.88 சதவீதம் வாக்குகளுடன் 9 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. 2014ம் ஆண்டு தேர்தலில் தமிழ்நாடு புதுச்சேரியில் மொத்தமாக ஜெயலலிதா தலைமையிலான அதிமுக களம் கண்டது. ‘மோடியா லேடியா’ என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டில் தனித்து களம் கண்ட ஜெயலலிதா, 37 இடங்களில் வென்றதுடன் 44.92% வாக்குகள் பெற்றார். இதுவே தமிழ்நாட்டில் இதுவரை அதிமுக பெற்ற அதிகபட்ச வாக்கு சதவீதமாக உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை லோக்சபா தேர்தல் வரலாற்றில் எந்தவொரு கட்சியும் இவ்வளவு பிரமாண்ட வெற்றியை இதுவரை பெற்றதில்லை .
இந்நிலையில் 2016ல் ஜெயலலிதா மறைந்த நிலையில், 2019ல் பாஜக உடன் எடப்பாடி பழனிசாமி ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக கூட்டணி வைத்தது. அந்தத் தேர்தலில் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது. 19.39% வாக்குகள் பெற்று ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. 2024 தேர்தலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எதிர்கொள்கிறது. இந்ததேர்தலில் எத்தனை இடங்களில் அதிமுக வெல்லும்.. எத்தனை சதவீதம் வாக்குகளை வாங்கும் என்பதை அறிய ஜூன் 4ம்தேதி வரை காத்திருக்க வேண்டும்.