அதிமுக தேர்தல் ஆவணங்களில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் மனு!
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் இரட்டை இலை சின்னத்துக்கு எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடுவதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு சின்னம் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.பாமர மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு, கட்சியின் சின்னம் அவர்களின் அறிமுகத்தைப் பெறுவது அவசியமாகிறது. தங்களுக்குரிய தேர்தல் சின்னம் பெறுவதற்காக அரசியல் கட்சிகள் முண்டியடிப்பதை வைத்தே அதன் முக்கியத்துவத்தை உணரலாம்.
அதிமுகவின் சின்னமான இரட்டை இலை மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்றது. எம்ஜிஆர் காலம் தொடங்கி, ஜெயலலிதா காலம் கடந்து தற்போது எடப்பாடி பழனிசாமி காலம் வரை இரட்டை இலை சின்னம், அதிமுகவிற்கு பல வெற்றிகளைத் தந்துள்ளது. கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக இரட்டை இலை சின்னம் இழுபறியில் சிக்கித் தவிக்கிறது.
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையேயான மோதலால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போதும் சின்னம் பிரச்சனை ஏற்பட்டது. விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மீண்டும் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற கேள்வி அரசியல் களத்தை ஆக்கிரமித்துள்ளது. ஏனெனில், ஓபிஎஸ், தாங்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக கூறி வருகிறார்.
கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி, ஓபிஎஸ் என இரண்டு தரப்பும் வேட்பாளர்களை நிறுத்தியதால் சின்னம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து ஓபிஎஸ் தரப்பு தமது வேட்பாளரை திரும்பப்பெற்றது. எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது. அதேசமயம், அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் சின்னத்திற்கான படிவங்களில் கையெழுத்திட்டார்.
இதனை தொடர்ந்து கிட்டத்தட்ட அதிமு எடப்பாடி பழனிச்சாமி அணிக்கே என்று உறுதியாகியிருந்தாலும், ஓபிஎஸ் தொடர்ந்து தன்னை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொண்டு, சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்தி வந்தார். இதற்கும் நீதிமன்றம் மூலம் தடை பெற்றார் எடப்பாடி பழனிசாமி.
இந்நிலையில், அதிமுக தேர்தல் ஆவணங்களில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் போல கட்சியின் ஆவணங்களில் அவைத் தலைவர் கையெழுத்திட அதிகாரம் அளிக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை கருத்தில் கொண்டு அதிமுக அவைத் தலைவருக்கு அதிகாரம் அளிக்கக் கோரி வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலை ஏற்படுத்துமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.