அப்படியே மண்ணுக்குள் புதைந்த கிராமங்கள்… கேரள வயநாட்டில் இந்த திடீர் நிலச்சரிவுக்கு என்ன காரணம்?
கேரளா மாநிலத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், அங்கு சுமார் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். இதில் சிக்கி இதுவரை 19க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே கேரளாவில் ஏற்பட்ட இந்த திடீர் நிலச்சரிவுக்கு என்ன காரணம் என்பது குறித்து சில தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
நமது அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை காரணமாகக் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே கேரள மாநிலத்தில் நேற்றிரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
அங்கே தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த இடத்தை சென்றடைவதே மீட்புப் படையினருக்குக் கடினமாக இருக்கும் நிலையில், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், “மேப்பாடி அருகே மலைப்பகுதிகளில் அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால், மலப்புரம், நீலம்பூர் பகுதிக்குப் பாயும் சாலியாறு ஆற்றில் பலர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். வயநாட்டில் உள்ள மேப்பாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட முண்டக்கை மற்றும் சூரல்மாலா பகுதிகளில் அமைந்துள்ள கிராமங்களில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது” என்று அவர்கள் தெரிவித்தனர்.
நிலச்சரிவைத் தொடர்ந்து கோவை சூலூரில் இருந்து வயநாட்டிற்கு இந்திய விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன.. தவிர, இந்திய ராணுவத்தின் பாதுகாப்புப் படையின் இரண்டு பட்டாலியன்களும் கண்ணூரில் இருந்து வயநாட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கே அவர்கள் மீட்புப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், “நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கையில் ஏராளமான வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்கள் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ளன. அந்த இடத்திற்குச் செல்லும் பாலம் கூட அடித்துச் செல்லப்பட்டதால், இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களுக்கு உதவக் கிராம மக்கள் விரைந்து செல்ல முடியவில்லை. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழும் பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது” என்றார்.
என்ன காரணம்: வயநாடு உட்பட கேரளாவின் பல வட மாவட்டங்களில் நேற்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. கேரளாவின் பெரும்பாலான பகுதிகள் மழைகளால் சூழப்பட்ட பகுதிகள் இப்போது நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளும் அதேபோலத் தான்.. அங்கே நேற்று காலை முதல் பல மணி நேரம் கனமழை கொட்டிய நிலையில், அதுவே நிலச்சரிவை ஏற்படுத்தியுள்ளது.