அரசு ஊழியர்களை விடுங்க, மதுரை மேலூர் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் எங்கே? பட்ஜெட் ERROR வருதாமே


அரசுப் பள்ளிகளைப்போல அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வரும்நிலையில், இங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஜனவரி மாத சம்பளம் இன்னும் கிடைக்கவில்லை என்கிறார்கள். மதுரையிலிருந்து இப்படியொரு புலம்பல் வெடிக்க துவங்கியிருக்கிறது. இதற்கு என்ன காரணம்?

தமிழகம் முழுவதிலும், அரசுப் பள்ளிகளைப்போல அரசு உதவி பெறும் பள்ளிகள் பல செயல்பட்டு வருகின்றன. வழக்கமாக மாதத்தின் கடைசி நாளில் ஒவ்வொரு ஆசிரியரின் வங்கிக் கணக்கில் மாத ஊதியம் வரவு வைக்கப்படும்.

அரசு பள்ளி: அதன்படி, ஒவ்வொரு மாதமும் ஆசிரியர்களுக்கான சம்பள பட்டியலை நிதித்துறையின் IFHRMS என்ற வெப்சைட்டில் தலைமையாசிரியர்கள் அப்லோடு செய்வார்கள். இதை 16-ம் தேதியிலிருந்து 28-ம் தேதி வரை இப்படி பதிவேற்றம் செய்யப்படும்..

ஆனால், சிலசமயம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளப் பட்டியலைப் பதிவேற்றம் செய்ய முடியாமல் போய்விடுவதாக கூறுகிறார்கள். டிஜிட்டல் தளத்தில் பிரச்சனையா? அல்லது அரசு நிதியே ஒதுக்கவில்லையா? என்ற சந்தேகத்தையும் சிலர் கிளப்பிவிடுகிறார்கள்.

சம்பள பிரச்சனை: எது எப்படியோ, மாத மாதம் ஊதியம் வந்தால்தான், குடும்பத்தை சமாளிக்க முடியும் சூழலில், ஆசிரியர்கள் உள்ளனர்.. அதிலும், இந்த சம்பளத்தை நம்பி, சிலரால் இஎம்ஐ செலுத்த முடியாத நெருக்கடியும் ஏற்பட்டுவிடுகிறது.

சிலசமயம் எதிர்பாராத மருத்துவச்செலவுகளும் வந்துவிடுகின்றன.. இதுபோன்ற செலவுகளுக்கு, மாத ஊதியம் சரியாக வந்தால்தான், சமாளிக்க முடியும் என்கிறார்கள். 2 வருடங்களுக்கு முன்பு, தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இந்த பிரச்சனை வெடித்திருந்தது.. இதற்கு பிறகு இப்படியொரு பிரச்சனைகள் எழுவது குறைந்துள்ளதாகவே தெரிகிறது.

மதுரை மேலூர்: ஆனால், தற்போது, மதுரை மேலூர் கல்வி மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு ஜனவரிக்குரிய சம்பளம் கிடைக்கவில்லை என ஆசிரியர்கள் புலம்ப துவங்கியிருக்கிறார்களாம். மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட உதவிபெறும் பள்ளிகளில் 1200 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வரும் நிலையில், இவர்களுக்கு ஜனவரி மாத சம்பளம் இன்னும் கிடைக்கவில்லையாம்..

வழக்கமாக சம்பளத்திற்கு முன்பே ஆசிரியர்களின் சம்பள பில் உள்ளிட்ட ஆவணங்கள் அதற்குரிய சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்யப்படும். அந்தவகையில், இப்போதும் முறையாக பில்கள் பதிவேற்றம் செய்தும் ஆசிரியர்களுக்கு ஒருவாரம் ஆகியும் சம்பளம் கிடைக்கவில்லை என்கிறார்கள்.

கோரிக்கை: பள்ளிகளுக்கான ஐடி மூலம் ஆய்வு செய்யப்பட்டதில், “பட்ஜெட் எரர்” என்று வருகிறதாம்.. இதுகுறித்து சம்பந்தப்பட்ட டிஇஓ அலுவலகத்தில் முறையிட்டதையடுத்து, 20 பள்ளிகளுக்கு சம்பளம் கிடைத்துள்ளது.. ஆனால் இன்னும் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. என்பதால், இந்த தொழில்நுட்ப பிரச்னைக்கு உடனடியாக தீர்வு கண்டு, சம்பளம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Share on: