தமிழகத்தில் உள்ள அரசு சட்ட கல்லுரிகளில் காலியாக உள்ள இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், பேராசிரியர்கள் தேர்வு தொடர்பாக விதிமுறைகளை வகுக்க நிபுணர் குழுவையும் நியமித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லுரிகளில் காலியாக உள்ள இணைப் போராசிரியர் பணிக்கு நேரடி நியமனங்கள் மேற்கொள்ளக் கோரி வசந்தகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் சட்டக்கல்வி இயக்குனர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தமிழகத்தில் உள்ள 15 அரசு சட்டக் கல்லூரிகளில், அனுமதிக்கப்பட்ட 20 இணை பேராசிரியர் பணியிடங்களில் 19 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், மொத்தமுள்ள 206 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில், 70 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த், சட்டக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் இணை பேராசிரியர் உதவி பேராசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
மேலும் காலிப்பணியிடங்களை நிரப்பும்போது இட ஒதுக்கீட்டு கொள்கையை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, பேராசிரியர்கள் தேர்வு தொடர்பாக விதிகளை வகுக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் மூத்த வழக்கறிஞர் வில்சன், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மைதிலி ராஜேந்திரன் அடங்கிய நிபுணர் குழுவையும் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
நிபுணர் குழுவின் ஆலோசனைகளை பின்பற்றி இணை பேராசிரியர் உதவி பேராசிரியர்கள் நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.