அருந்ததியர் என ஜாதி பாக்குறாங்க.. அதிகாரிகள், கட்சியினரால் நெல்லை திமுக கவுன்சிலர் ராஜினாமா கடிதம்!


தான் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அதிகாரிகள் மற்றும் சொந்த கட்சியினர் ஜாதி பாகுபாடு காட்டுவதாக கூறி திருநெல்வேலி மாநகராட்சியில் திமுக கவுன்சிலர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி மேயருக்கு கடிதம் அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 45 இடங்களில் திமுக வென்றுள்ளது. காங்கிரஸ் 4 இடங்களிலும், மதிமுக ஒரு இடத்திலும் வென்றது. மேலும் அதிமுக கட்சியினர் 4 இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த மாநகராட்சி தற்போது திமுக வசம் உள்ளது. மேயராக சரவணன், துணை மேயராக ராஜு ஆகியோர் உள்ளனர். இந்த மாநகராட்சியில் 36வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சின்னத்தாய். இவர் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர்.

இந்நிலையில் தான் சின்னத்தாய், தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வதாக, மேயர் சரவணனுக்கு பரபரப்பாக கடிதம் எழுதியுள்ளார். மேலும் அதிகாரிகள் ஜாதி பாகுபாடு பார்ப்பதால் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்து பரபரப்பபை கிளப்பி உள்ளார். இதுதொடர்பாக சின்னத்தாய் எழுதியுள்ள கடித்ததில் கூறப்பட்டுள்ளதாவது:

எனது வார்டில் குடிநீர் பிரச்சனை என்பது தலைவிரித்தாடுகிறது. 6 மாதங்களுக்கு முன்பு குஜராத்தை சேர்ந்த நிறுவனத்துக்கு குடிநீர் ஏற்றுவது மற்றும் குடிநீர் வினியோகம் செய்யும் உரிமம் வழங்கப்பட்டது. அன்று முதல் வார்டில் குடிநீர் பிரச்சனை உள்ளது. அதிகாரிகள் மற்றும் சொந்த கட்சியினர் ஜாதி பாகுபாடு காட்டுகின்றனர். அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த நான் மட்டும் தான் இப்போது கவுன்சிலராக உள்ளேன். ஆனாலும் கூட லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது என்னை அவமானப்படுத்தினார்கள்.

மேலும் நான் அருந்ததியர் என்பதால் என் வார்டில் திட்டமிட்டு குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றனர். ஜாதி பார்த்து குடிநீர் பிரச்சனையை தீர்க்காமல் அலட்சியம் காட்டுகின்றனர். மக்களுக்கு பணியாற்ற முடியாததால் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்கிறேன்’’ எனக்கூறி அதற்கான கடிதத்தை மேயர் சரவணன் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு அவர் அனுப்பி உள்ளார்.

மேலும் அதற்கான கடிதத்ததை அவர் வாட்ஸ்அப் குழுவிலும் பகிர்ந்துள்ளார். இந்த கடிதம் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே தான் சம்பவம் பற்றி அறிந்த பாளையங்கோட்டை திமுக எம்எல்ஏ அப்துல் வகாப், சின்னத்தாய் மற்றும் அவரது கணவரை அழைத்து சமாதானம் பேசி வருகிறார்.
Share on: