அழுக்குத் துணிக்குள் மறைக்கப்பட்ட லஞ்சப் பணம்.. பட்டுக்கோட்டை நகராட்சியில் ரூ. 6.54 லட்சம் பறிமுதல்!


தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சியில் கட்டடம் கட்ட அனுமதி வழங்க லட்சக்கணக்கில் லஞ்சப் பணம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு வந்த புகாரின்பேரில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் 6.54 லட்சம் ரூபாய் லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் முதல் பொறியாளர் வரை அதிகாரிகள் பலர் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சியில் ஆணையராகப் பணியாற்றி வருபவர் குமரன். பட்டுக்கோட்டை நகராட்சியின் அவசரக் கூட்டம் நேற்று நடத்தப்பட்டதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, நகரமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை முடித்துச் சென்ற பிறகு நகராட்சி அதிகாரிகளை வைத்து குமரன் கூட்டத்தை நடத்தியுள்ளார். இந்தக் கூட்டத்தில் வீட்டுமனை சம்பந்தமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறை கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் அருண் பிரசாத், சரவணன், பத்மாவதி ஆகியோர் அடங்கிய 10 பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நகராட்சி அதிகாரிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசராணையை முடித்தவுடன் ஒவ்வொரு அதிகாரிகளிடம் இருந்து எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பிவைத்துள்ளனர்.

இந்த சோதனையில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இடத்திற்கு அனுமதி வழங்குவதற்காக லஞ்சப் பணத்தை பெற்று மறைத்து வைத்திருந்த பொறியாளர் மனோகரனிடம் இருந்து 84 ஆயிரம் ரூபாய், ஒப்பந்ததாரர் எடிசன் என்பவரிடம் இருந்து 66 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், போலீசாரை கண்ட நகராட்சி கமிஷனர் குமரனின் டிரைவர் வெங்கடேஷன் நகராட்சி அலுவலகத்தின் காம்பவுண்டு சுவரில் இருந்து 8,000 ஆயிரம் ரூபாயை துாக்கி வீசியதை போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், கமிஷனர் குமரன் தனது 5 லட்சம் ரூபாயை ஓட்டுநரின் அழுக்குத் துணிகளுக்குள் மறைத்து வைக்க கூறியது தெரியவந்தது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அந்தப் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து, நகராட்சி ஆணையர் குமரன், உதவி பொறியாளர் மனோகரன், டிரைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய உள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
Share on: