இந்தி தேசிய மொழி அல்ல.. அது அலுவல் மொழி தான்.. சிஎஸ்கே வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேச்சு!
இந்தியாவில் இந்தி தேசிய மொழி அல்ல என்றும், அது அலுவல் மொழி மட்டுமே என்று சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அஸ்வின், இனி ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்தார். ஃபேர்வெல் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கூட அளிக்கப்படாமல் அஸ்வின் ஓய்வு பெற்றது தமிழக ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்றது. இருந்தாலும் ஐபிஎல் போட்டியில் மறக்க முடியாத ஃபேர்வெல்லை கொடுப்போம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்திய அணிக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் தமிழக வீரர் அஸ்வின் தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் 537 விக்கெட்டுகள், 3,503 ரன்களை விளாசியுள்ள அஸ்வின், ஒருநாள் கிரிக்கெட்டுஇல் 156 விக்கெட்டுகளையும், டி20 கிரிக்கெட்டில் 72 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். ஸ்ரீகாந்த், முரளி விஜய் ஆகியோருக்கு பின் தமிழ்நாட்டில் இருந்து அஸ்வினால் மட்டுமே இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க முடிந்தது.
அதேபோல் சர்வதேச அளவில் அறிவுப்பூர்வமான கிரிக்கெட் வீரர்களில் அஸ்வினுக்கு நிகர் அஸ்வின் மட்டும் தான். அந்த அளவிற்கு ஒவ்வொரு மைதானம், ஒவ்வொரு பேட்ஸ்மேன், கிரிக்கெட்டின் வரலாறு, கிரிக்கெட் வீரர்கள் தொடர்பான தகவல் என்று அனைவரும் வியக்கும் அளவிற்கு தகவலை வைத்திருப்பவர். இதனால் அஸ்வின் விரைவில் பயிற்சியாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஓய்வுக்கு பின் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வரும் அஸ்வின், சில தனியார் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இன்று காஞ்சிபுரத்தில் உள்ல ராஜேஸ்வரி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 23ஆம் ஆண்டு பட்டமளிப்பு நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.
அதன்பின் அஸ்வின் பேசுகையில், மாணவர்களை பார்த்து ஆங்கிலம், தமிழ் மற்றும் இந்தி என்று கேள்வி கேட்டார். அதற்கு ஆங்கிலத்திற்கு ஓரளவிற்கு சத்தம் வந்தது. பின்னர் தமிழ் மொழி என்று கேட்ட போது அரங்கமே அதிர்ந்தது. இறுதியாக இந்தி என்று கேட்ட போது, எந்த சத்தமும் வரவில்லை. அப்போது அஸ்வின், இந்தி நமது தேசிய மொழி அல்ல.. அது வெறும் அலுவல் மொழி மட்டும் தான்.
இதனை பகிர்ந்து கொள்ள நினைத்தேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அஸ்வின், நான் கேப்டனாக இல்லாததற்கும் பொறியியல் தான் காரணம் என்று கூறினார். அதேபோல் என்னை பார்த்து யாராவது நீ அந்த விஷயத்திற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறினால், நான் அதை மட்டுமே செய்வேன். கேப்டன்சி விஷயத்தில் யாரும் இதுவரை என்னை பார்த்து அப்படி சொல்லவில்லை என்று தெரிவித்தார்.