ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. நிறைவடைந்த வேட்பு மனுத்தாக்கல்.. மொத்த எண்ணிக்கை எவ்வளவு?


ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது. திமுக, நாம் தமிழர் கட்சி உட்பட மொத்தமாக 65 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடக்கவுள்ளது.

2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். அவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், 2023ஆம் ஆண்டு மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த இடைத்தேர்தலில் திருமகன் ஈவெராவின் தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.

அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெற்ற நிலையில், கடந்த ஆண்டு திடீரென உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்.5ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிப்.8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக விசி சந்திரகுமார் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக, தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்தன. பின்னர் நாம் தமிழர் கட்சி சார்பாக சீதாலட்சுமி வேட்பாளராக அறிவித்தார்.

இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தமாக 65 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 18ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடக்கவுள்ளது. வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாக வரும் 20ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தமாக 93 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். அதில் 6 பேர் திரும்ப பெற்ற நிலையில், 38 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மொத்தமாக 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
Share on: